
இந்தியாவை உலகளவில் ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலமாக மாற்றுவேண்டுமென்றால், தற்போது இருக்கும் அதிகபட்ச வரியைக் குறைக்க வேண்டும். இந்த கடுமையான வரி உயர்வு சுற்றுலாத்துறையை கடுமையாகப் பாதிக்கிறது என மத்தியஅரசுக்கு நாடாளுமன்றக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை என்பது உலகளவில் 1.24% மட்டும்தான். இது சராசரிக்கும் குறைவானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுச் சந்தைகளில் இந்திய சுற்றுலாவை வளர்த்தல்- அதில் வெளிநாட்டில் இந்தியத் தூதரகங்கள், சுற்றுலா அலுவலகங்களின் பங்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் சுற்றுலாவுக்கான ஏராளமான வாய்ப்புகள், இடங்கள், வளங்கள் இருந்தபோதிலும் பயணிகள் வருகை குறைவாக இருப்பதற்கு அதிகமான வரிவிதிப்பும், பன்முக வரிவிதிப்பும்தான் காரணம். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் சுற்றுலா பேக்கேஜ் மதிப்பும், அதற்கான வரிவிதிப்பும் அதிகமாக இருக்கிறது
சுற்றுலாப் பயணிகள் ஹோட்டலில் தங்குதல், விமானப் பயணம், உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றுக்கும் வரிவிதிப்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சுற்றுலா பேக்கேஜின் மதிப்பு இயல்புக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத்தளங்களுக்கு பயணிகள் வருகை குறைவாகவே இருக்கிறது
கடந்த 2019ம் ஆண்டில் வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் வாயிலாக ரூ.2.11 லட்சம் கோடி வருவாய் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த துறைக்கு விதிக்கப்படும் வரிதான் எந்தத் துறையிலும் இல்லாத அளவு அதிகமாகும்.
சுற்றுலாப் போக்குவரத்துக்கு விதிக்கப்படும் வரி குறித்து மத்திய அரசு முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும். இந்தியா தன்னுடைய தேசத்தில்இருக்கும் இயற்கைச் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணிகளையும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நீண்டகாலத்துக்கு சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரங்கள் அதிகளவில் செய்வது முக்கியம்.இந்தியா சுற்றுலாவுக்கு உகந்த இடம் என்பதை உலகளவில் கொண்டு சேர்க்க ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல், விளம்பர உத்திகள் தேவை. உலகளவில் சுற்றுலாத் துறையில் இந்தியாவின் பங்கு 1.24% இருக்கும் நிலையில் அதை 5% ஆக உயர்த்த இவற்றை செய்யய வேண்டும்.
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரக அலுவலகங்களில் இருக்கும் அதிகாரிகள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை தாயகத்துக்கு ஈர்க்க இலக்க வைத்து செயல்பட வேண்டும். அதிகமான பயணிகளை கவர்ந்திருக்கும் தேசமாக இந்தியா மாற தூதரகங்கள் செயல்பட வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.