ford in india : இந்தியாவில் தனது பேட்டரி கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தனது பேட்டரி கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களிடமும் இதே தகவலை ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
350 ஏக்கர்
சென்னையில் கடந்த 1995ம் ஆண்டு முதல் ஃபோர்டு கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை மறைமலை நகரில் 350ஏக்கர் பரப்பில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் 2,600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் தொழிற்சாலையில் காரின் எந்திரம், அசெம்ப்ளி மட்டும் உற்பத்தியாகிறது. ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக எக்கோ ஸ்போர்ட், எண்டோவர் வாகனங்கள் உருவாக்கப்படுகிறது. சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதியாகின்றன
இதேபோல் குஜராத்தின் சதானந்த் நகரிலும் ஃபோர்டு நிறுவனம் கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இங்கு அஸ்பையர், ஃபிகோ கார்கள் தயாரிக்கப்பட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இங்கு ஏறக்குறைய 4ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
தொடர் நஷ்டம்
இந்நிலையில், தொடர் இழப்பு, மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளால் அதிகமான செலவு வரும்காலத்தில் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி இந்தியாவில் இருந்து வெளியேறஇருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து சென்னை மறைமலைநகரில் செயல்படும் தொழிற்சாலையை நிறுத்தப்போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தில் மத்திய அரசு ஃபோர்டு நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருந்தது. அந்தத் திட்டத்தில் ஏராளமான பலன்கள் கிடைக்கும். இதற்கு ஃபோர்டு நிறுவனமும் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால், திடீரென்று அந்த விண்ணப்பத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது.
திட்டவட்டம்
அதுமட்டுமல்லாமல் சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு பேட்டரி கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருப்பதாக முதலில் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தியாவில் பேட்டரி கார் தயாரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று இப்போது ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் முதலீடு செய்யப்போவதில்லை என்றும் கூறியுள்ளது.
ஃபோர்டு இந்தியாவின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ நாங்கள் கவனமாகப் பரிசீலித்ததில், இந்தியத் தொழிற்சாலையிலிருந்து பேட்டரி கார்கள் ஏதும் தயாரிக்கப்போவதில்லை, ஏற்றுமதி செய்யப்போவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். எங்கள் நிறுவனத்தை உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தில் சேர்த்த மத்தியஅரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம், ஆதரவுக்கும் நன்றி. எங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை மறுக்கட்டமைக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழிற்சாலையில் மாற்று வழிகளுக்கான அம்சங்களை தொடர்ந்து ஆய்வு செய்வோம்.” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே குஜராத்தின் சனானந்த் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை தொழிற்சாலையை வாங்கவும் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது
4ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலைகளில் சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால்தான், சென்னையிலுள்ள மறைமலைநகர் மற்றும் குஜராத்திலுள்ள சனந்த் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களையும் மூடப் போவதாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்தது
அவ்வாறு தொழிற்சாலை மூடப்பட்டால் 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
போராட்டம்
இதனால், தொழிற்சாலையை மூட வேண்டாம். தொடர்ந்து தொழிற்சாலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஃபோர்டு நிறுவன தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அந்நிறுவனம் ஏற்கவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்திலுள்ள பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குகளை விற்பனை செய்து, ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் ஊழியர்களிடம் செட்டில்மென்ட் குறித்து பேச அந்நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது இதற்கு ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள். இந்த சூழலில் ஃபோர்டு நிறுவனம் இப்படி ஒர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது