
எல்ஐசி ஐபிஓ விற்பனையிலும், பங்கு ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்கவும் உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. அதேசமயம், 2021, நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட 2021,நிதிச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
எல்ஐசி ஐபிஓ
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதற்காக எல்ஐசி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு 2021, நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. ஆனால், இதை நிதி மசோதாவாக அறிமுகம் செய்த மத்திய அரசு அதை நிறைவேற்றியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்ஐசி பாலிசிதாரர் ஒருவர் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-11ன் கீழ், நிதி மசோதா மூலம் எல்ஐசி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ஏற்க முடியாது என மனுவில் தெரிவித்திருந்தார். மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
உச்ச நீதிமன்றம்
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ எல்ஐசி ஐபிஓ விற்பனைக்கு தடை விதிக்க முடியாது, பங்கு ஒதுக்கீட்டுக்கும் தடை விதிக்கவோ தலையிடவோ முடியாது. அதேநேரம், 2021, நிதிச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். நிதி மசோதாவா , 2021,நிதிச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, எல்ஐசி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது கேள்விக்குள்ளாகிறது. இதற்கு மறுபரிசீலனை அவசியம்.
2017ம் ஆண்டு நிதிச்சட்டமும் இதுபோன்று நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான மனுவும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த மனுவையும் முந்தையமனுவுடன் சேர்த்து கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.
மறுப்பு
எல்ஐசி ஐபிஓவில் ஏராளமான முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓவில் நீதிமன்றம் தலையிடுவதும், ஐபிஓ ஒதுக்கீட்டுக்கு தடைவிதிப்பதும் முறையாகாது. ஆதலால், மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் இதில் வழங்க இயலாது” எனத் தெரிவித்தனர்.
எல்ஐசி ஐபிஓ விற்பனை கடந்த 9ம் தேதி முடிந்தது, இன்று மாலைக்குள் முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. பங்குகள் கிடைக்காத முதலீட்டாளர்களுக்குள் நாளைக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் திரும்பச் செலுத்தப்படும். வரும் 16ம் தேதிக்குள் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் டீமேட் கணக்கில் பங்குகள் சேர்க்கப்பட்டு, 17ம் தேதி பங்குச்சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.