அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏதும் இல்லை. அதன் இயல்பை தேடுகிறது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏதும் இல்லை. அதன் இயல்பை தேடுகிறது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. லூசின்ஹோ பெலாரியோ எழுப்பிய கேள்வியில் இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 28 முறை மதிப்பு சரிந்துள்ளது, 34 சதவீதம் மதிப்பு குறைந்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 5720 கோடி டாலராகக் குறைந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் அளித்து பேசியதாவது:
இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏதும் இல்லை. இந்திய ரூபாய் மதிப்பை தொடர்ந்து ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. ரூபாய் மதிப்பில் ஊசலாட்டம் கடுமையாக இருக்கும்போது ரிசர்வ் வங்கி தலையிட்டு சீரமைக்கும்.
ரூபாய் மதிப்பை நிர்ணயிப்பதில் ரிசர்வ் வங்கி பெரும்பாலும் தலையிடாது. அவ்வாறு தலையிட்டாலும் மதிப்பை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யாது. ரூபாய் மதிப்பு இயல்பாக தனது நிலையை சரிசெய்து கொள்ளும்.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது உண்மைதான். ஆனால், சிறப்பான முறையில் மற்ற நாடுகளைவிட செயல்படுகிறது. மற்ற நாடுகளின் கரன்ஸிகளோடு ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு ஊக்களிக்கும் வகையில் இருக்கிறது.
ஆதலால், நான் அவை உறுப்பினர்களுக்கு அளி்க்கும் உறுதி என்னவென்றால், இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏதும் இல்லை. ரூபாய் மதிப்பு தனது இயல்பான மதிப்பை தேடி வருகிறது அவ்வளவுதான். மீண்டும் பின்னோக்கி மதிப்பு சரிவு வரும். இப்போதும் இந்தியாவிடம் 500 பில்லியன் டாலர் கையிருப்பு இருக்கிறது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்