அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் வங்கிகள்; மூன்றாவது வங்கியாக சிக்னேச்சர் வங்கி திவால்!!

By Dhanalakshmi GFirst Published Mar 14, 2023, 6:00 PM IST
Highlights

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கியைத் தொடர்ந்து மூன்றாவது வங்கியாக சிக்னேச்சர் வங்கி திவாலாகி இருக்கிறது. அமெரிக்காவின் வங்கி வரலாற்றில் இது மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் திடீரென திவாலானது. இந்த வங்கி பெரும்பாலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி வருகிறது. இவர்களின் முதலீடும் இந்த நிறுவனத்தில் அதிகமாக இருந்தது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் முதலீடு வைத்து இருந்தன. அமெரிக்காவின் மிகப்பெரிய 16 வங்கிகளில் ஒன்றாக இருந்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திவாலான வங்கியாக பதிவாகியுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்த காரணத்தால், இந்த வங்கி வாங்கியிருந்த அரசு பத்திரங்களின் மீதான மதிப்பு சரசரவென சரிந்தன. வங்கியின் முகமதிப்பும் சரிந்தது. இது, டெபாசிட்தாரர்களை பாதித்தது. உடனடியாக டெபாசிட்தாரர்கள் தங்களது பணத்தை எடுத்தனர். இப்படி ஒரே நாளில் 42 பில்லியன் டாலர் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டது. தற்போது அரசு தலையிட்டு உத்தரவாதம் அளித்து இருப்பதால், முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டியதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி திவால்; ஒரே நேரத்தில் 42 பில்லியன் டாலர் பணம் திரும்பப் பெற்றதால் பதற்றம்!!

இதற்கிடையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் சிக்னேச்சர் வங்கி திவால் ஆகி இருக்கிறது. வங்கி வாடிக்கையாளர்களை காப்பாற்றும் நோக்கத்தில், வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் பாலமாக செயல்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க நிதித்துறை, வங்கி அதிகாரிகள் இணைந்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''வரி செலுத்துவோருக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கியின் டெபாசிட்தாரர்கள் அனைவருக்கும் முழு இழப்பீடும் வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிக்னேச்சர் வங்கி 2001 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. மேலும், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிதிகளை வைத்திருக்கும் சில வங்கிகளில் ஒன்றாக வளர்ந்தது. சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்ட பின்னர் சிக்னேச்சர் வங்கி வாடிக்கையாளர்களும் பதற்றம் அடைந்தனர். தங்களது கணக்குகளில் 2,50,000 டாலருக்கும் அதிகமாக இருப்பதால், அவர்களது டெபாசிட் தொகை பாதுகாப்பாக உள்ளதா என்று விசாரிக்கத் தொடங்கினர், அதே நேரத்தில் 250,000 டாலர் வரை மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாக எப்டிஐசி உறுதி அளித்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

விரைவில், சிக்னேச்சர் வங்கி, டெபாசிட்டர்கள் தங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கத் தொடங்கியதால் அதன் பங்கு மதிப்பும் பெரிய அளவில் சரிவைக் கண்டது. 

Gold Rate Today: மீண்டும் ரூ.43 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்

சிக்னேச்சர் வங்கியின் அறிக்கையின்படி, அதன் மொத்த டெபாசிட் தொகையான கிட்டத்தட்ட 88 பில்லியன் டாலர்களில் 79 பில்லியன் டாலர் அளவிற்கு காப்பீடு செய்யப்படவில்லை. இந்த வங்கி 2018 ஆம் ஆண்டில் இருந்து கிரிப்டோ மீதான டெபாசிட் தொகையை ஏற்கத் தொடங்கியது  

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 27% டெபாசிட் தொகையானது கிரிப்டோ டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானது என்பதால், சிக்னேச்சர் வங்கி தனது டெபாசிட் தொகையை அதிகரிக்க கிரிப்டோ நிறுவனங்கள் உதவின என்றும் வால்ஸ்டிரீட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

click me!