GST Council: ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.16,982 முழுமையாக விடுவிப்பு - நிர்மலா சீதராமன்

Published : Feb 19, 2023, 09:44 AM ISTUpdated : Feb 19, 2023, 10:32 AM IST
GST Council: ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.16,982 முழுமையாக விடுவிப்பு - நிர்மலா சீதராமன்

சுருக்கம்

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் இறுதித் தவணையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.16,982 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விடுவிப்பது, சில பொருட்கள் மீதான வரி குறைப்பு, ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான தாமதக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களும் மத்திய அமைச்சரவை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியும் பேசியுள்ளார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி | 10 மாதங்களில் இல்லாத அளவு சரிந்தது

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு

குறிப்பாக, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டின் இறுதித் தவணையாக ரூ.16,982 கோடி விடுவிக்கப்படுவதாகக் கூறினார். "ஜிஎஸ்டி இழப்யீட்டு நிதியில் இவ்வளவு தொகை இல்லை என்றபோதும், மத்திய அரசின் சொந்த நிதி ஆதாரத்திலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியது நிறைவேற்றப்பட்டுள்ளது." எனவும் அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, சில மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில மாநிலங்கள் முறையாக ஏ.ஜி. சான்றிதழ் சமர்ப்பிக்காமல் இருப்பதால்தான் இழப்பீடு வழங்குவதும் தாமதமாகிறது என்று சுட்டிக்காட்டினார். மேலும், கேரள அரசு 2017-18ஆம் ஆண்டில் இருந்தே இந்தச் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தாமதக் கட்டணம் குறைப்பு

உரிய காலத்துக்குள் ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதக் கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தைக் குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். ரூ.5 கோடி ஆண்து வருமானம் உள்ளவர்கள் தாமதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்தால் தாமதிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் அபராதக் கட்டணம் பெறப்படும்; ரூ.5 கோடிக்கு மேல் ரூ.20 கோடி வரை வருமானம் கொண்டவர்களுக்கு தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபாரதமாக வசூலிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2023-24ஆம் நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் இந்தியா.. பிரதமர் மோடி அரசை பாராட்டிய வுட் மெக்கன்சி அறிக்கை !!

வரி குறைக்கப்பட்ட பொருட்கள்

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. பென்சில் ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரிகளில் பொருத்தப்படும் டேக் டிராக்கர்களுக்கு சில நிபந்தனைகளுடன் முழுமையாக வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பேக் செய்யப்பட்ட திரவநிலை வெல்லத்தின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ஆனால், சில்லறை விற்பனையில் திரவநிலை வெல்லத்திற்கு முழுமையாக வரி விலக்கு தரப்பட்டுள்ளது. 

ஆன்லைன் விளையாட்டு, கேசினோ ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் பான் மசாலா மீது அளவு அடிப்படையிலான வரி விதிப்பைக் கொண்டுவருவது பற்றி அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

தமிழகத்துக்கு இழப்பீடு

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்துக்கு 2020 -21ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 4,230 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

5 ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு இத்துடன் முடிவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளது பற்றிப் பேசிய அவர், "ஜி.எஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நீட்டிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்காமல் நிதி அமைச்சகமும் பிரதமரும் தாமாக முடிவெடுப்பதை ஏற்றுகொள்ள முடியாது. அப்படிச் செய்வது ஜனநாயக நடைமுறை அல்ல" என்று கூறினார்.

சுந்தர் பிச்சையைத் தொடர்ந்து யூடியூப்பின் சிஇஓவாகும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்; யார் இந்த நீல் மோகன்?

அடுத்த கூட்டம் மதுரையில்

மதுரையில் நடைபெற இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் குடியரசுத் தலைவர் வருகை ஆகிய காரணங்களால் டெல்லிக்கு மாற்றப்பட்டது எனவும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடக்கும் எனவும் தமிழக நிதி அமைச்சர் கூறினார். ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளை அறிக்கையாகத் தயாரித்து மத்திய நிதி அமைச்சருக்கும் அமைச்சகச் செயலாளருக்கும் வழங்க இருப்பதாகவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு