
கோவை நகரம் ஒரு காலத்தில் திப்பி சுல்தானிடம் இருந்து ஆங்கிலேயர்கள் கரங்களுக்கு மாறியது. ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் கோவையில் தொழிற்புரட்சிக்கு வித்திட்டார்.
மோட்டார் வாகனத் தொழிலைத் தவிர பவுண்டரி தொழில், ஜவுளித்தொழில் என காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தது. பாம்பே டெக்ஸ்டைல் நிறுவனம் தொழிற்சாலை தொடங்கியபின் கோவையின் வளர்ச்சி நிமி்ர்ந்து பார்க்கவைத்தது. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து என கட்டமைப்பு வசதிகள் அதிகரித்தன. தமிழகத்தின் மான்செஸ்டர் நகரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பெருமைக்குரிய கோவை நகரம் தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையாக மாறிவருகிறது. டிசிஎஸ் நிறுவனம் ஏற்கெனவே தனது சிறிய கிளையை தொடங்கிவிட்டது. ஐபிஎம் நிறுவனம் எதிர்காலத்தில் கிளைகளைத் தொடங்கும் நகரங்களில் கோவையை முன்னிலையில் வைத்துள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம் ஏற்கெனவே இங்கு கிளையைத் தொடங்கிவிட்டது. இதுபோல் ஏராளமான நிறுவனங்கள் கிளைகளைத் தொடங்கியுள்ளன.
டெக் மகிந்திரா நிறுவனத்தின் சந்தைப்பிரிவுதலைவர் ஹர்ஸ்வேந்திர சோயின் கூறுகையில் “ எங்களின் புதிய கிளையில், இன்டலிஜென்ட் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏராளமானோர் கோவையிலிருந்து வருகிறார்கள். அவர்கள் உள்ளூரிலேயே பணியாற்றுவதற்கும் கிளை அமைப்பது வசதியாக இருக்கிறது. ” எனத் தெரிவி்த்தார்
கொரோனா தொற்றின்போது, வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்கள், தற்போது, அலுவலகத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். சிலர் சொந்த ஊரிலேயே பணியாற்றவும் விருப்பம். அத்தகைய விருப்பம் உள்ளவர்களுக்கு கோவையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரும்போது, ஏதுவாக இருக்கிறது.
இதற்கிடையே கடந்த 4ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் ரத்தினம் பிஸினஸ் மற்றும் ஐடி பார்க்கை திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது, கோவையில் இன்னும் 20 நிறுவனங்கள் தங்கள் கிளையை அமைக்க உள்ளன. ஏறக்குறைய 3500 பேருக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்துபடியாக தொழில்தொடங்க ஏற்ற இடங்களில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. சுத்தமான காற்று, மாசு குறைந்த சூழல், போக்குவரத்து நெரிசல் குறைவு, போக்குவரத்து வசதி என அனைத்திலும் கோவை சிறந்து விளங்குகிறது.
கோவையில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, சாய்பாபா கோயில் பகுதியில் 3 மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. மேம்பாலங்கள் அமைக்கப்படும்போது கட்டமைப்பு வசதிகளும் மேம்படும். சென்னை, குர்கான் நகரங்களோடு ஒப்பிடுகையில் கோவையில் வாழ்வாதாரச் செலவு 22 சதவீதம் குறைவுதான்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.