chitra: சொத்து பறிமுதல்! சித்ராவுக்கு அடுத்தடுத்து சிக்கல்: 15 நாட்கள் கெடு விதித்த செபி

By Pothy RajFirst Published May 25, 2022, 1:31 PM IST
Highlights

chitra  :தேசியப் பங்குச்சந்தைக்கு ஏற்படுத்திய இழப்புக்கு இழப்பீடாக ரூ.3.12 கோடி கேட்டு என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தேசியப் பங்குச்சந்தைக்கு ஏற்படுத்திய இழப்புக்கு இழப்பீடாக ரூ.3.12 கோடி கேட்டு என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த இழப்பீட்டை அடுத்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் செபி கெடு விதித்துள்ளது.

அபராதம்

தேசிய பங்குச்சந்தைக்கு ஏற்படுத்தியிருந்த இழப்பீட்டுக்கு ஈடாக சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு செபி அபராதம் விதித்திருந்தது. அந்த அபராதத்தை செலுத்த சித்ரா தவறியதையடுத்து, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சீர்கேடு

என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா நியமிக்கப்பட்டபின், அவருக்கு உதவியாக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்றும், விதிமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது என்றும் தகவல்கள் வெளியாகின. 

இதில் ஆனந்த் சுப்பிரமணியனை முதலில் சித்ரா தனது ஆலோசகராகவும், பின்னர் குரூப் ஆப்ரேட்டிங் ஆபிஸராக பதவி உயர்த்தினார். இதற்காக ஆண்டுக்கு ரூ.4.21 கோடி ஊதியம் வழங்கப்பட்டது. 

ஆனந்த் சுப்பிரமணியனுக்கு குறுகிய காலத்தில் அதிகமான ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறித்து புகார் எழுந்தது. இதுதொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி விசாரணை நடத்தி, சித்ரா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்தது. 

15 நாட்கள் கெடு

இந்த அபராதத்தை சித்ரா ராம்கிருஷ்ணன் செலுத்தவில்லை. இதையடுத்து,  அபராதத்துக்கான வட்டி, திரும்பவசூலிக்கும் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.3.12 கோடியை அடுத்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று சித்ராவுக்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த 15நாட்களுக்குள் செபிக்கு ரூ.3.12 கோடியை சித்ரா செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், சித்ரா ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள், அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு அந்தப்பணத்தை வசூலிக்கும். அதுமட்டுமல்ல சித்ரா ராம்கிருஷ்ணன் வங்கிக்கணக்கும் முடக்கப்படும்.

கோ-லொகேஷன் வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள சித்ரா ராம்கிருஷ்ணன் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சித்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு இம்மாதம் 31ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜாமீன்

இதற்கிடையே சித்ரா ராமகிருஷ்ணனிடம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!