custom duty on edible oil: சமையல் எண்ணெய் விலை குறையும்: சூரியகாந்தி, சோயா எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு

By Pothy RajFirst Published May 25, 2022, 12:50 PM IST
Highlights

custom duty on edible oil: நாட்டில் அதிகரித்துவரும் சமையல் எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கும் நோக்கில் 20 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் இறக்குமதிக்கு வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் சமையல் எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கும் நோக்கில் 20 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் இறக்குமதிக்கு வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

2 ஆண்டுகளுக்கு விலக்கு

இதன்படி 2022-23ம் ஆண்டு, 2023-24ம் ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவுக்கான சமையல் எண்ணெய் தேவையில் பெரும்பகுதி உக்ரைன், ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகி வருகிறது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூரிலிருருந்து இறக்குமதியாகிறது. இதில் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரால் சமையல் எண்ணெய் இறக்குமதியில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்நாட்டில் சில்லரை விலைஉயரத் தொடங்கியது.

விலை உயர்வு

இதற்கிடையே இந்தோனேசியாவும் பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால், சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை முதல்தான் இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளது இருப்பினும் சமையல் எண்ணெய் விலை உள்நாட்டில் குறைந்தபாடில்லை.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் 20 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்து மத்திய நிதிஅமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

விலை குறையும்

இந்த வரிவிலக்கால், இனிவரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலை குறைந்து, பணவீக்கமும் படிப்படியாக கட்டுக்குள் வரும். ஏற்கெனவே மத்திய அரசு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.8, டீசலில் லிட்டருக்கு ரூ.6 குறைத்துள்ளது. சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி விலக்கால் வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று எண்ணெய் வர்த்தகர்கள் நம்புகிறார்கள்.

இந்திய சமையல் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் அமைப்பின் இயக்குநர் பி.வி. மேத்தா கூறுகையில் “ மத்திய அரசு எண்ணெய் இறக்குமதிக்கான வரிவிலக்கு அளித்திருப்பதால், சோயா எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3 வரை விரைவில் குறையும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிதியாண்டில் 35 லட்சம் டன் சோயா எண்ணெயும், 18 லட்சம் டன்வரை சூரியகாந்தி எண்ணெயும் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. மத்திய அ ரசு, ரைஸ்பிரான் ஆயில், மற்றும் கனோலா எண்ணெய்க்கும் வரிவிலக்கு அளி்த்தால் உள்நாட்டில் எண்ணெய் விலை வேகமாகக் குறையும்” எனத் தெரிவித்தார்.

பலன் கிடைக்கும்

நாட்டின் சில்லரைப் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 6.95 சதவீதமாகவும், ஏப்ரலில் 7.79 சதவீதமாகவும் உயர்ந்தது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருவதைக் கவனித்த ரிசர்வ் வங்கி, கட்டுக்குள் கொண்டுவர வட்டிவீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியது.

இனி ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியும், மத்திய அ ரசும் எடுத்துவரும் நடவடிக்கையால் வரும் மாதங்களில் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து கட்டுக்குள் வரும் என்று நம்பப்படுகிறது

click me!