
கடந்த 12 மாதங்களில் சிமெண்ட் விலை ரூ.390 அதிகரித்துள்ள நிலையில் விரைவில் மூட்டை ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிசில் அறிக்கை
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, உற்பத்திச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதால் வேறு வழியின்றி இந்த விலை உயர்வை விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் என கிரிசில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி விலை
சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய்விலை, பெட் கோக் விலை கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை உயராமல் இருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் மட்டும் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் குஜராத்தில் உற்பத்தியாகும் உள்நாட்டு பெட்கோக்(நிலக்கரி) விலை 26 சதவீதம் அதிகரித்துள்ளது, ஏப்ரலில் 21 சதவீதம் அதிகரி்த்துள்ளது. அமெரிக்காவில் 96 சதவீதம் விலை உயர்ந்துள்ளது
ஏற்றுமதி பாதிப்பு
ரஷ்யா உக்ரைன் இடையே நடந்து போரால் அங்கிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் இருப்பதால் சப்ளையில் பெரும் இடர்பாடு நிலவுகிறது. இதில் உக்ரைனிலிருந்துதான் ஏராளமான நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அங்கிருந்து இறக்குமதி பாதிக்ககப்பட்டிருப்பது விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்
காலநிலை
2வதாக ஆஸ்திரேலியாவில் உள்ள காலநிலை, திடீர் மழை, போன்றவற்றால் அங்குள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி தேவைக்கு ஏற்ப வெட்டி எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடை உத்தரவு
3வதாக இந்தோனேசியா அரசு நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதித்து, உள்நாட்டு தேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியுள்ளது. இந்த 3 காரணிகளால் நிலக்கரி விலை ஏற்றம் கண்டுள்ளது
ஆஸ்திரேலிய நிலக்கரி விலை 157 சதவீதம் அதிகரித்துள்ளது டன் 300 டாலரைக் கடந்துள்ளது. கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டைவிட 35 சதவீதம் அதிகமாகும்.
டீசல் விலை உயர்வு
இது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனால் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயர்வு ஆகியவையும் சிமெண்ட் விலை உயர்வுக்குக் காரணமாகும். மொத்தமாக டீசல் கொள்முதல் செய்பவர்களுக்கு லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பு போன்றவையும் சிமெண்ட் விலை உயர காரணம். சில்லரை விலையில் மார்ச் மாதத்தில் மட்டும் டீசல்விலை 14 முறை உயர்ந்து லிட்டருக்கு ரூ.10 அதிகரித்துள்ளது.
செலவு கூடுதலாகும்
2022ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சுணக்கமாக இருந்த வீடுகள் கட்டுமானத்துறை மார்ச் மாதத்தில்தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த நேரத்தில் சிமெண்ட் விலை உயர்த்தப்படுவது வீடு கட்டும் கனவில் உள்ள நடுத்தரமக்கள், முதல்முறையாக சொந்தவீடு கட்டும் கனவில் உள்ளவர்களின் பாக்கெட்டை சூடுவைக்கும், பட்ஜெட்டைவிட கடந்து செல்லும்.
நிலக்கரி பற்றாக்குறை, விலை உயர்வு, டீசல் விலை உயர்வால் வரும் நாட்களில் சிமெண்ட்விலை மூட்டைக்கு ரூ.30 வரை அதிகரிக்கும் எனத் தெரிகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.