மாநிலங்களுக்கு மூல தன முதலீட்டுக்கு சிறப்பு உதவி வழங்கும் திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ. 4,079 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூல தன முதலீட்டுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களுக்கு ரூ.56,415 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி கிடைக்கும்.
மத்திய நிதியமைச்சகம் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளது. அதில், 2023-24 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டிற்கான சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.56,415 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், மின்சாரம், சாலைகள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல துறைகளில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்தில், சரியான நேரத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் சொல்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஜல் ஜீவன் மிஷன் மற்றும் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களுக்கான நிதியையும் சேர்த்துள்ளது.
பீகார் மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ.9,640 கோடி கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசம் ரூ.7,850 கோடியைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக சிக்கிம் மற்றும் கோவா ஆகியவை முறையே ரூ.388 கோடியும், ரூ.386 கோடியும் பெற்றுள்ளன.
ராஜஸ்தானுக்கு ரூ. 6,026 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.7,523 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.3,647 கோடி, குஜராத்துக்கு ரூ.3,478 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ.3,195 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ.2,102 கோடி, அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.1,255 கோடி, ஹரியனாவுக்கு ரூ.1,093 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.826 கோடி, மிசோரத்துக்கு ரூ.399 கோடி கிடைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2023-24 நிதியாண்டில் 50 ஆண்டு வட்டியில்லா கடனாக ரூ. 1.3 லட்சம் கோடி வரை மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படுகிறது. நிதி அமைச்சகம் இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதியை எட்டு பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது.