Breaking : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!!

By Dhanalakshmi GFirst Published Mar 28, 2023, 10:37 AM IST
Highlights

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி எப்) வட்டி விகிதத்தை 8.15% ஆக இபிஎப்ஓ நிர்ணயித்துள்ளது. இது நடப்பு ஆண்டுக்கான வட்டி விகித உயர்வாகும்.

கடந்த ஆண்டு, இபிஎப்ஓ 2021-22க்கான வட்டி விகிதமாக 8.1 சதவீதம் என்று அறிவித்தது, இது கடந்த நாற்பது ஆண்டுகளில் மிகக் குறைவாக கருதப்பட்டது. கடைசியாக 1977-78ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8 சதவீதமாக  நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு முன்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது. இதைத்தான் கடந்த 2022ஆம் ஆண்டில் 8.1 சதவீதமாக குறைத்தனர். அப்போது இதற்கு கடுமையான எதிர்ப்பு வருங்கால வைப்பு நிதியாளர்களிடம் இருந்து எழுந்தது. 

தொழிலாளர்களின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்தியதாக தெரிவித்துள்ளது.

மத்திய அறங்காவலர் குழுவின் முடிவிற்குப் பிறகு, 2022-23 ஆம் ஆண்டுக்கான டெபாசிட் மீதான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான தொழிலாளர் வருங்கால வைப்பி நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓ மூலம் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின்னரே அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய அமைப்பான இபிஎப்ஓ வட்டி விகிதத்தை அறிவிக்கும்.

2018-19 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 8.65 சதவீதத்திலிருந்து, 2019-20 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.5 சதவீதமாக இபிஎப்ஓ குறைத்தது. 

இபிஎப்ஓ 2016-17 ஆம் ஆண்டில், சந்தாதாரர்களுக்கு 8.65 சதவீத வட்டியும், 2017-18 ஆம் ஆண்டில், 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது.

click me!