ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் அஷ்வின் டானி காலமானார். அவருக்கு வயது 79.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவிய குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை வாரிசும், நிர்வாகமற்ற இயக்குனராக பணியாற்றி வந்தவருமான அஷ்வின் டானி இன்று காலமானார். அவருக்கு வயது 79.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாக தனது பயணத்தை 1968ஆம் ஆண்டில் தொடங்கிய அஷ்வின் டானி, படிப்படியாக பல்வேறு பதவிகளுக்கு உயர்ந்தார். ரூ.21,700 கோடி விற்றுமுதலுடன் நாட்டின் மிகப்பெரிய பெயிண்ட் தயாரிப்பாளராக இருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸின் வளர்ச்சிக்கு அஷ்வின் டானியின் பங்களிப்பு முக்கிய பங்கு வகித்தது.
ஃபோர்ப்ஸ் 2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அஷ்வின் டானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 7.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1944ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் பிறந்த அவர், மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவின் அக்ரான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், டெட்ராய்டில் வேதியியலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1968ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், தனது குடும்ப வணிகமான ஏசியன் பெயிண்ட்ஸில் மூத்த நிர்வாகியாக பணியில் சேர்ந்தார்.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இயக்குநர், முழுநேர இயக்குனர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்த அவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிநவீன விஷயங்களை பயன்படுத்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்.
பெயிண்ட், பிளாஸ்டிக், பிரிண்டிங் மை மற்றும் டெக்ஸ்டைல்ஸ் போன்ற தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கணினி வண்ணப் பொருத்தத்தின் முன்னோடியாக இருந்தவர் அஷ்வின் டானி.
2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் மாற்றவில்லையா.? தேதி முடியப்போகுது.. என்ன செய்யணும் தெரியுமா.?
மர மேற்பரப்புகளுக்கான புதுமையான ஃபினிஷிங் சிஸ்டமான அப்கோலைட் நேச்சுரல் வுட் ஃபினிஷ் மற்றும் ஆட்டோமொபைல் ஆஃப்டர் மார்க்கெட் பிரிவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேகமாக உலர்த்தும் தன்மை கொண்ட அல்கைட் எனாமலான ஆட்டோமோட்டிவ் ரீஃபினிஷிங் சிஸ்டம் போன்ற அற்புதமான தயாரிப்புகளை உருவாக்கியதற்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு மே மாதம் சிஎன்பிசி-டிவி18 இந்தியா பிசினஸ் லீடர் விருதுகளின் 18ஆவது பதிப்பில் கலந்து கொண்ட அஷ்வின் டானி, ஏசியன் பெயிண்ட்ஸின் வெற்றியில் வாடிக்கையாளரை மையப்படுத்தியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.