
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று கடும் ஊசலாட்டம் நிலவியதால், சற்று சரிவில் முடிந்தன.
அமெரிக்கப் பொருளாதார நிலவரம், சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு சர்வதேச காரணிகளால் இன்று காலை இந்தியச் சந்தை சரிவுடனே தொடங்கியது.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தும் என்ற அறிவிப்பு போன்றவை ஆசியச் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தி, சரிவை ஏற்படுத்தின. இதன் எதிரொலி இந்தியச் சந்தையிலும் இருந்ததால் காலை முதலே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது.
முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால், சந்தையில் சரிவு காணப்பட்டது. இருப்பினும் எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள், எரிசக்தி பங்குகளை ஆர்வத்துடன் முதலீட்டாளர்கள் வாங்கியதில் சந்தையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து, 60,910 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி10 புள்ளிகள் குறைந்து, 18,122 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், மற்ற பங்குகள் இழப்பையும் சந்தித்தன.
நிப்டியில் டைட்டன், மகிந்திரா அன்ட் மகிந்திரா, பவர்கிரிட், மாருதி சுஸூகி, யுபிஎல் பங்குகள் அதிக லாபமடைந்தன. பார்தி ஏர்டெல், அப்பலோ மருத்துவமனை, ஹின்டால்கோ, டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ் பங்குகள் சரிவில் முடிந்தன. நிப்டியில் எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி துறை பங்குகள் ஒரு சதவீதம் உயர்ந்தன. மருந்துத்துறை, உலோகம், பொதுத்துறை பங்குகள் அதிகம் விற்கப்பட்டன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.