
ஏர் இந்தியா நிர்வாகத்தை டாடா குழுமத்திடம் மத்திய அரசு இன்று ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா நிர்வாகத்தை டாடா குழுமம் மீண்டும் பெற இருக்கிறது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு பாதிப்பு காரணமாக ஏர் இந்தியா வருவாய் மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சியை மத்திய அரசு துவங்கியது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்பும் நிறுவனங்கள் அதற்கான விவரங்களை சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை சமர்பித்தது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு ரூ. 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்திற்கு விற்றது.
இதை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது இந்த பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதால், இன்று ஏர் இந்தியா நிர்வாகம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.