2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை எதிர்பார்க்கலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை எதிர்பார்க்கலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரை முடிந்தபின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். பிப்ரவரி 1ம் தேதி(நாளை) நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டையும், தனது 4-வது பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார்.
undefined
பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. 2022-23-ம் (ஏப்ரல்2022-மார்ச்2023) நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% முதல் 8.5% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
2. நடப்பு நிதியாண்டில்(2021-22) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் வரை உயரும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டைவிட சற்று குறைவுதான். இதற்கு எரிபொருள் விலை ஏற்றம், பணவீக்கம், விலைவாசி உயர்வு காரணமாகக் கூறப்படுகிறது
3. நடப்பு நிதியாண்டில் பொருளாதார செயல்பாடுகள் கொரோனா காலத்துக்கு முந்தைய நிலைக்கு வேகமாகத் திரும்பியதால்தான் 9.2 சதவீதத்தை அடைய முடிகிறது.
4. 2022-23ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும், ஊக்கமாகவும் தடுப்பூசி செலுத்துதல் இருக்கும். சப்ளை, உற்பத்தி துறையில் செய்துள்ள சீர்திருத்தங்கள், வர்த்தகக் கட்டுப்பாடுகளை எளிதாக்கி தளர்த்தியது, ஏற்றுமதி வளர்ச்சி, முதலீடுகளுக்கான செலவினம் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் இருக்கும்.
5. தனியார் துறையில் வரும் நிதியாண்டில் அதிகமான முதலீட்டை எதிர்பார்க்கலாம். இதன் காரணமாகவும் 2022-23ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிஉயர்வாக இருக்கும்
6. கொரோனா பெருந்தொற்றால் உருவாகும் பொருளாதாரச் சீர்குலைவு, பொருளதார தேக்கநிலை, மந்தநிலை, வரும் நிதியாண்டில் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
7. உலகளாவிய பொருளாதாரச்சூழல் உறுதியற்றதாக இருக்கிறது. இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யும் நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் உலகம்முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, பல நாடுகளில் பணவீக்கம் உயர்ந்துள்ளது, பெரும்பலான மத்திய வங்கிகளில் இருந்து பணப்புழக்கம் அளவுகுறைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பு, விலைவாசி, வேளாண்மை உள்ளடக்கிய மிகைப்பொருளாதார காரணிகள் வலுவாக உள்ளன
8. ஒட்டுமொத்தமாக 2022-23ம் ஆண்டு பொருளாதார சவால்களை சமாளிக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்பதை பொருளாதாரக் காரணிகள் வெளிக்காட்டுகின்றன
9. 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் வேளாண் துறை 3.9% வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதற்கு முந்தைய ஆண்டான 2020-21ம் ஆண்டில் 3.6% வளர்ச்சி அடைந்திருந்தது. கொரோனா பெருந்தொற்றால் வேளாண்துறை அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டபோதிலும் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது.
10. கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் சேவைத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்புநிதியாண்டில் சேவைத்துறையில் வளர்ச்சி 8.2% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020-21ம் ஆண்டில் இது 8.4 % வளர்ச்சி இருந்தது.
11. உலகளவில் அதிகமான அன்னியச்செலாவணி கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. ஏறக்குறைய 13.2 மாதங்கள் ஏற்றுமதிக்கு நிகரான அன்னியச்செலாவணி கையிருப்பு இருக்கிறது
12. வரி மற்றும் வரிசாராத இனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் நடப்புநிதியாண்டில் அதிகரித்துள்ளது.
13. யுபிஐ முறையில் பணம் செலுத்துதல் முறை இந்தியாவில் அதிகரித்துள்ளது.2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் யுபிஜி முறையில்ரூ.8.26 லட்சம் கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
14. டெல்லி , மே.வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பலமாநிலங்கள் பத்திரப்பதிவுக் கட்டணத்தைக் குறைத்ததால், வீடுகள் விற்பனை நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ளது.
15. மும்பை, தானே, புனே,நொய்டானா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், கொரோனா 2-வது அலையில் சென்னை, காந்திநகர், அகமதாபாத், ராஞ்சி, டெல்லி, கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை சரிந்துள்ளது.
16. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவிலிருந்து நடப்பு நிதியாண்டு ஏப்ரல்-நவம்பர் வரை அதிகமாக பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் 8.8% ஏற்றுமதி செய்யப்பட்டநிலையில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் மாதங்களில் 13% ஏற்றுமதியாகியுள்ளது
17. கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், புதிய மருந்துகள் கண்டுபிடிப்புகள் காரணமாக இந்திய மருந்துத்துறையில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது.2020-21ம் ஆண்டைவிட 53 சதவீதம் அதிகமாக அன்னிய முதலீடு, அதாவது ரூ4,413 கோடி வந்துள்ளது.
18. 2025-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற இந்தியா 1.40 லட்சம் கோடி டாலரை உள்கட்டமைப்புத்துறைக்கு செலவிட வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது