பிட்காயின், என்எப்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா? என்ன சொல்கிறார் நிதி அமைச்சக அதிகாரி

By manimegalai aFirst Published Feb 3, 2022, 10:16 AM IST
Highlights

பிட்காயின், எதிரியம் அல்லது என்எஎப்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி பதில் அளித்துள்ளார்.

பிட்காயின், எதிரியம் அல்லது என்எஎப்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி பதில் அளித்துள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததில் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்தான். அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் சொத்துக்கள், கிரிப்டோகரன்சியின் மூலம் பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் கிரிப்டோகரன்சியின் மூலம் கிடைக்கும் வருவாய் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ள டிஜிட்டல் கரன்சி என்பது ரிசர்வ் வங்கியால் மட்டுமே உருவாக்கப்படுபவை. ரிசர்வ் வங்கி நேரடியாக உருவாக்காமல் அதற்கான மத்திய வங்கிக்கான டிஜிட்டல் கரன்சி(சிபிடிசி) மூலம் இந்த கரன்சி உருவாக்கப்படும். இந்தியாவில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டு கட்டுப்படுத்துபவை ரிசர்வ் வங்கி என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால், டிஜிட்டல் கரன்சியை கட்டுப்படுத்தவது ரிசர்வ் வங்கி அல்லாமல் சிபிடிசி எனும்அமைப்பாகும். 

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் நிலையில் உலகளவில் புழக்கத்தில் இருக்கும் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதிரியம் அல்லது என்எப்டிக்கு அங்கீகாரம் அளி்க்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை அமைச்கத்தின் செயலாளர் டிவி சோமநாதன் பதில் அளித்துள்ளார். அவர் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்படும் டிஜிட்டல் கரன்சிக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்படும், அதற்கு அரசின்ஆதரவு இருக்கும், சட்டப்பூர்வ பணமாக இருக்கும். அதே மக்கள் சட்டப்பூர்வமாக எந்த இடத்திலும் எந்தப் பரிமாற்றத்துக்கும் பயன்படுத்தவதாக இருக்கும். ஆனால், உலகளவில் புழக்கத்தில் இருக்கும் பிட்காயின், எதிரியம் அல்லதுஎன்எப்டி போன்ற டிஜிட்டல் கரன்சிகளுக்கு இதன் மூலம் சட்ட அங்கீகாரம் கிடைக்காது.

பிட்காயின்,எதிரியம் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் வேறு. ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் டிஜிட்டல் கரன்சி என்பது வேறு. பிட்காயின் உள்ளிட்டவற்றுக்கு ஒருபோதும் சட்டஅங்கீகாரம் கிடைக்காது. கிரிப்டோ சொத்துக்களுக்கு மதிப்பு என்பது இரு நபர்கள் சேர்ந்து தீர்மானிப்பது. கிரிப்டோ மூலம் தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றை வாங்கலாம்.ஆனால், அந்த கரன்சிக்கான மதிப்பு அரசால் அங்கீகரிக்கப்படாது, அதற்கு மதிப்பும் இருக்காது.

கிரிப்டோ கரன்சியில் மீது முதலீடு செய்யும் மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அதற்கு மத்தியஅரசின் சட்ட அங்கீகாரம் இல்லை, ரிசர்வ் வங்கியும் அங்கீகரிக்கவில்லை. உங்களின் முதலீடு வெற்றிகரமாக திரும்பிவருமா அல்லது பாதுகாப்பாக இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஏதாவது இழப்பு ஏற்பட்டாலோ அல்லது கிரிப்டோ கரன்சி சைபர் கிரைம் மூலம் ஹேக்கர்களால் திருடப்பட்டாலோ அதற்கு அரசு பொறுப்பேற்காது. 

கிரிப்டோ கரன்சிக்கு மட்டும் அரசு வரிவிதிக்கவில்லை, ஊக வாணிபத்தின் மூலம் வருமானம் ஈட்டும் அனைத்துக்கும் வரி விதிக்கப்படுகிறது. இதில் வேளாண்துறை மட்டும்தான் விதிவிலக்கு. கிரிப்டோ கரன்சி மூலம் கிடைக்கும் வருமானம் வர்த்தகத்திலிருந்து கிடைக்கும் வருமானமா அல்லது முதலீட்டு வருமானமா அல்லது ஊக வாணிபத்தில் கிடைக்கும் வருமானமா என்பதற்கு தெளிவான வரையறை இதுவரை இல்லை.

ஆதலால்தான் 30 சதவீதம் வரி ஒரே மாதிரியாக விதிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோக்கு மட்டும் வரிவிதிக்கவில்லை. குதிரைப்பந்தயத்தில் கிடைக்கும் வருமானத்துக்கு கூட 30 சதவீதம் வரி இருக்கிறது. ஏற்கெனவே ஊக வணிகத்துக்கு இருக்கும் 30 சதவீத வரி தற்போது கிரிப்டோவுக்கும் விதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு சோமநாதன் தெரிவித்தார்

click me!