
நவகிரகங்களில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வணிகம், தொழில் ஆகியவற்றின் காரகராக அறியப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அவர்களின் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். பகுத்தறிவில் திறமையானவர்களாக இருப்பார்கள். விரைவான முடிவுகளை எடுக்கவும், தொழிலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் வல்லவர்களாக இருப்பார்கள்.
அதே சமயம் ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால் அந்த நபர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். புதனை வலுப்படுத்துவதற்கான சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதன் கிரகத்தை வழிபடுவதற்கு புதன்கிழமை மிக உகந்த நாளாகும். இந்த நாளில் விநாயகர் பெருமானை வழிபட்டு புதன் மந்திரங்களை சொல்ல வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவது புதனின் தாக்கத்தை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
ஜோதிடத்தின் படி புதன் கிரகம் பச்சை நிறத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால்தான் புதன்கிழமை அன்று பச்சை நிறப் பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே புதன்கிழமை வழிபாட்டின் பொழுது பச்சை நிற இருக்கையில் அமர்ந்து, பச்சை நிற ஆடைகளை அணிந்து பூஜைகள் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
புதன் கிரகத்தை வலுப்படுத்துவதற்கு புதன்கிழமைகளில் துளசியை வழிபட வேண்டும். துளசி செடி வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்களை கொண்டு வரும். புதன் கிழமைகளில் துளசி செடியை நடுவது அல்லது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு துளசி செடியை புதிதாக வாங்கி தானமாக கொடுப்பது மிகவும் பலனளிக்கும் என்று கருதப்படுகிறது.
புதனின் செல்வாக்கை பெறுவதற்கு தான தர்மங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். புதன்கிழமைகளில் திருநங்கைகள் அல்லது சிறுமிகளுக்கு பச்சை நிற ஆடைகள், பழங்கள், வளையல்கள் மற்றும் இனிப்புகளை கொடுப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது புதனின் செல்வாக்கை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் உங்களின் தர்ம செயல்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால் ஜோதிடரை அணுகி அவரை கலந்தாலோசித்தப் பின்னர், மரகதப் பச்சை நிறக் கல்லை அணியலாம். இந்த கல்லானது புதனின் சக்தியை பலப்படுத்தி வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)