2030க்குள் உலகம் அழிந்துவிடும்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! சொன்னது இவங்களா ? அப்போ நடந்துருமோ ?

By Raghupati R  |  First Published Apr 27, 2022, 12:37 PM IST

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போதே உலகம் நேரடியாக எதிர்கொண்டிருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமடையும் என எச்சரித்திருக்கிறது ஐநா வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை.


உலகில் மனிதர்களின் செயல்பாடுகளால் கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து உள்ளது. இதனால், பூமியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள், பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட ஆபத்து தரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது, பனிப்பாறைகள் உருகுவது போன்றவற்றால் ஏற்பட கூடிய பருவகால மாற்றம் பேரழிவுகளை ஏற்படுத்துகிறது என விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

உலக வெப்பமயமாதல் :

வருங்காலத்தில் மிக அபாய அளவை எட்டும் வகையில் வெப்பநிலை உயர்வை தவிர்க்க சாத்தியமிக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி கடந்த 2018ம் ஆண்டில் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது. அதில், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் விவசாயம் மூலம் வெளியாகும் பூமியை வெப்பமாக்கும் வாயுக்களை 2030ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வரக்கூடிய தசாப்தங்களில் பத்து லட்சம் விலங்கு, பூச்சி மற்றும் தாவர இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன என்று அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரங்களின் வளர்ச்சி, விவசாயத்துக்காக வனங்கள் அழிப்பு, உணவுக்காக மீன் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் முக்கால் பகுதி நிலம் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த சூழலில் ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று, வரும் ஆண்டுகளில் பூமியானது முன்பிருந்த நிலையை விட மிக அதிக பேரழிவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாய நிலையில் உள்ளது என சுட்டி காட்டி உள்ளது.

அந்த அறிக்கையில், தற்போது காணப்படும் பருவகால மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போனால், வருகிற 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் ஆண்டும் 560 என்ற அளவில் உலக நாடுகள் பேரழிவுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இது நாள் ஒன்றுக்கு 1.5 பேரழிவுகள் என்ற விகிதத்தில் இருக்கும். இது, கடந்த 2015ம் ஆண்டில், ஆண்டொன்றுக்கு 400 பேரழிவுகள் என்ற அளவில் இருந்தது. இந்த பேரழிவுகளில் பல, தீ மற்றும் வெள்ளம் போன்ற தட்பவெப்ப நிலை சார்ந்தே காணப்படும். என்றாலும் பெருந்தொற்றுகள் அல்லது ரசாயன விபத்துகள் போன்றவவையும் ஏற்பட கூடும் என்றும் அறிக்கை தெரிவித்து உள்ளது.

2030க்குள் ஏற்படும் சம்பவங்கள் :

கடந்த 1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையில், உலக நாடுகள் ஆண்டொன்றுக்கு 90 முதல் 100 வரையிலான நடுத்தர முதல் அதிக அளவிலான பேரழிவுகளால் பாதிக்கப்பட்டு வந்தன. 2030ம் ஆண்டில் தீவிர வெப்ப அலைகளின் எண்ணிக்கையானது, 2001ம் ஆண்டில் இருந்ததுபோல் 3 மடங்கு இருக்கும். 30 சதவீதம் அதிக வறட்சி நிலையும் காணப்படும். இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று, பொருளாதார சரிவு மற்றும் உணவு பற்றாக்குறை ஆகிய அனைத்தும் இந்த பருவகால மாற்ற எதிரொலியாக நடைபெறும் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.

கடந்த 1990 காலகட்டத்தில் ஓராண்டில், 7,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு பேரழிவுகளால் இழப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது ஆண்டொன்றுக்கு 17,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. பேரழிவுகளால் ஆண்டுதோறும் ஆசிய-பசிபிக் பகுதிகள் மிக அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1.6 சதவீதம் இழந்து வருகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கான பணியில் மக்களும் முனைப்பு காட்ட வேண்டும். அப்படி இல்லையென்றால், பேரழிவுகளின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு சென்று விடும் என்றும் அறிக்கை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதையும் படிங்க : கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி அதிரடி இடமாற்றம்.! பீதியில் முக்கிய தலைகள் !!

click me!