2022 ஆம் ஆண்டில் உலக ராணுவ செலவினம் இதுவரை இல்லாத அளவாக 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது.
2022 ஆம் ஆண்டில் உலக ராணுவ செலவினம் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது என்றும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பா முழுவதும் ராணுவ செலவு கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) உலகளாவிய ராணுவ செலவினங்கள் குறித்த தனது வருடாந்திர அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் உலக செலவினம் தொடர்ந்து 8-வது ஆண்டாக உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஐரோப்பாவில் 13 சதவீதம் உயர்ந்துள்ளது, இது குறைந்தது 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். இதில் பெரும்பாலானவை ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தொடர்புடையவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மற்ற நாடுகளும் ராணுவ செலவினங்களை முடுக்கிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது.
undefined
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் நான் தியான் பேசிய போது “ சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய ராணுவ செலவினங்களின் தொடர்ச்சியான அதிகரித்து வருகிறது.இது பாதுகாப்பற்ற உலகில் வாழ்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும். மோசமான பாதுகாப்பு சூழலுக்கு பதிலளிக்கும் வகையில் நாடுகள் இராணுவ வலிமையை மேம்படுத்துகின்றன." என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : அவரே வந்துட்டாரா.! கிறிஸ்துவ சமூக ஓட்டு இனி பாஜகவுக்கு தான்.. கேரளா விசிட்டில் சிக்சர் அடித்த மோடி!!
கடந்த 2014 இல் உக்ரைனின் கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு நாட்டின் கிழக்கில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை ஆதரித்தது. ரஷ்யாவின் இந்த நகர்வுகள் ரஷ்யாவின் மற்ற அண்டை நாடுகளிடையே எச்சரிக்கையை தூண்டி உள்ளது. இதனால், பின்லாந்தின் ராணுவ செலவு 36 சதவீதம், லிதுவேனியாவின் இராணுவ செலவு 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் உக்ரைனில் ராணுவச் செலவு ஆறு மடங்கு அதிகரித்து 44 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது SIPRI தரவுகளில் இதுவரை பதிவு செய்யப்படாத ஒரு நாட்டின் ராணுவச் செலவினத்தில் மிக உயர்ந்த ஒரு வருட அதிகரிப்பாகும்.
ரஷ்ய ராணுவ செலவு 2022 இல் 9.2 சதவீதம் அதிகரித்து சுமார் 86.4 பில்லியன் டாலராக இருந்தது. இது ரஷ்யாவின் 2022 ஜிடிபியில் 4.1 சதவீதத்திற்கு சமமாக இருந்தது, இது 2021ல் 3.7 சதவீதமாக இருந்தது. இதனால் ராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் ராணுவ செலவு 2022 ஆம் ஆண்டில் 0.7 சதவீதம் அதிகரித்து 877 பில்லியன் டாலராக இருந்தது. இதனால் உலகில் அதிகளவு ராணுவத்திற்கு செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இது மொத்த உலக இராணுவ செலவில் 39 சதவீதமாக இருந்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவியால் ராணுவ செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கான அமெரிக்க நிதி இராணுவ உதவி 2022 இல் 19.9 பில்லியன் டாலராக இருந்தது.
உலகில் அதிகளவு ராணுவத்திற்கு செலவு செய்யும் நாடுகளில் சீனா 2-வது இடத்தில் உள்ளது. 292 பில்லியன் டாலர் ராணுவத்திற்கு சீனா ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டை விட 4.2 சதவீதம் அதிகமாகும்
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ செலவீனம் 81.4 பில்லியன் டாலர் ஆகும். இந்த பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட 6% உயர்ந்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இராணுவ உபகரணங்களுக்கான உலகளாவிய செலவினம் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர், ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பை பாதித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
சவுதி அரேபியா 2022-ல் ராணுவத்திற்கு 75 பில்லியன் டாலர் ஒதுக்கியது. இதே போல் 2022-ல் இங்கிலாந்து 68.5 பில்லியன் டாலர், ஜெர்மனி 55.8 பில்லியன் டாலர், பிரான்ஸ் 53.6 பில்லியன் டாலர், தென் கொரியா 46.4 பில்லியன் டாலர் ராணுவத்திற்கு ஒதுக்கி உள்ளன.
ஜப்பான் 2022ல் 46 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காக செலவிட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 5.9 சதவீதம் அதிகமாகும். 1960க்குப் பிறகு ஜப்பான் ராணுவத்திற்கு அதிக செலவு செய்வது இதுவே முதன்முறை..
இதையும் படிங்க : 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு சூடான் படைகள் ஒப்புதல்.. வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவதால் நடவடிக்கை..