துபாயில் உள்ள ஐன் துபாய் (Ain Dubai) எனப்படும் உலகின் மிகப்பெரிய ராட்டினம் செயல்படாமல் இருப்பதால் சுற்றுலா பயணிகளும், வணிகர்ககளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் உலகின் மிகப்பெரிய ராட்டினம் அறிமுகமானது. ஆனால் அறிமுகமான சில மாதங்களிலேயே செயல்படாமல் நின்றுபோனது. ஐன் துபாய் (துபாயின் கண்) என்று அழைக்கப்படும் இந்த ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கிளாம்-ஹப்பில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இருந்துவருகிறது.
இந்நிலையில், இந்த ராட்டினம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளது. ஆடம்பரமான விளக்குகள் மட்டுமே இன்னும் வேலை செய்துகொண்டிருக்கின்றன. "ஐன் துபாய் வளாகம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்" என்று அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறுகிறது.
"கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முடிப்பதில் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறோம்" எனவும் கூறியுள்ளது. ராட்டினம் குறைந்தது ஒரு மாதத்திற்கு மூடப்பட்டிருக்கும். ஆனால் மறு திறப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த காரணத்தால் ராட்டினம் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படவில்லை.
ஆறு வருடங்களில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஐன் துபாய் வளாகம் மீண்டும் எப்போது திறக்கப்படும் என அதனை ஒட்டி இருக்கும் உணவகங்கள், கடைகள், கஃபேக்களின் உரிமையாளர்களும் காத்திருக்கின்றனர்.
"கடந்த ஆண்டு குளிர்காலத்திலேயே திறக்கப்படும் என்று உறுதியளித்தனர். இந்த ஆண்டு குளிர்காலம் வரப்போகிறது. இப்போதுகூட திறக்கப்படும், திறக்கப்படும் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என அருகிலுள்ள கடை ஒரு ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
சர்வதேச நிறுவனங்களின் கூட்டமைப்பால் கட்டப்பட்ட ஐன் துபாய், புளூவாட்டர்ஸில் அமைந்துள்ளது. குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு மையமாக செயல்படும் வகையில் ஐன் துபாய் தீவு உருவாக்கப்பட்டுள்ளது. ஐன் துபாய் ஒரு வருடத்திற்கும் மேலாக, மூடப்பட்டிருப்பதால், வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட LED விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டிருக்கின்றன.
ஐன் துபாய் ராட்சத ராட்டினம் 250 மீட்டர் (825 அடி) உயரத்தில் வானளாவ உயர்ந்து நிற்கிறது. இது லண்டனில் உள்ள ராட்டினத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. முழுமையாக குளிரூட்டப்பட்ட அறைகளைக் கொண்ட இந்த ராட்டினத்தில் ஒரே சவாரியில் சுமார் 1,750 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.