Explainer: டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு: இதனால் இந்தியாவுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்? முக்கியத்துவம் என்ன?

By Dhanalakshmi GFirst Published Nov 16, 2022, 2:58 PM IST
Highlights

இந்தியாவில் 2023ஆம் ஆண்டில், ஜி20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. பாலியில் இன்று அதற்கான உரிமையை அதிகாரபூர்வமாக இந்தியப் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்தியாவில் இந்த மாநாடு நடப்பதால் நமக்கு என்ன பயன் என்று பலரும் சிந்திக்கக் கூடும். 

ஜி 20 உச்சி மாநாட்டில் தலைவர்கள் உணவுப் பாதுகாப்பு, பருவநிலை நிலை மாற்றத்தால் ஏற்பட்ட சிக்கல்கள்,  அவற்றை எப்படி சமாளிப்பது மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து விவாதித்தனர். ஜி20 க்கு தலைமை தாங்கும் ஐந்தாவது நாடாக இந்தியா இருக்கிறது. 1999ஆம் ஆண்டில் இந்தக் குழு அமைக்கப்பட்டாலும், உலகப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் சென்ற பிறகு 2008 ஆம் ஆண்டில் அதிக அக்கறையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கியது. 

இதுகுறித்து மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸின் டாக்டர் ஸ்வஸ்தி ராவிடம் ஏசியாநெட் நியூஸ் ஆங்கிலம் தொடர்பு கொண்டபோது, ''இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலியில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு வெளிப்படையாக உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி20 தலைவர் பதவி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜி 20 இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. ஜி20 உருவாக்கியதில் இருந்து 2008 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் சிக்கல்களை எதிர்கொண்டது வரை, நான்கு வளரும் நாடுகள்தான் இந்த மாநாட்டை நடத்தி உள்ளன. மெக்சிகோ 2012ஆம் ஆண்டிலும், 2016 ஆம் ஆண்டில் சீனாவும், 2018 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவும், நான்காவதாக 2022 ஆம் ஆண்டில்  இந்தோனேஷியாவும் இந்த மாநாட்டை நடத்தியுள்ளன. தற்போது, ஐந்தாவது நாடாக இந்தியா ஜி20 தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது.

2023 ஜி20 உச்சி மாநாடு தலைவர் பதவியை ஏற்றார் பிரதமர் மோடி; குறிக்கோள் நிறைந்ததாக இருக்கும் என்று பேச்சு!!

பொருளாதார பின்னடைவு ஏற்படும்போது, நாடு இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும்போது, ஒத்துழைப்பு தேவை என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளன. 

இந்தியா ஒரு முக்கியமான பங்கை வகிக்க முடியும். முன்னேறிய நாடுகளான உலகளாவிய வடக்கு மற்றும் ஜி7 நாடுகளுடன் ஒரே மாதிரியான நல்லுறவை இந்தியா கொண்டுள்ளது. மறுபுறம், ரஷ்யா போன்ற நாடுகளுடனும், உலகளாவிய தெற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் நல்ல உறவை கொண்டுள்ளது. எனவே, இந்தியாவால் நாடுகளுக்கு இடையே நல்ல உறவை ஏற்படுத்த முடியும். 

பாலி உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரஷ்யா - உக்ரைன் போர், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை குறித்து பேசினார். அவற்றை சரிசெய்வதற்கான முயற்சிகள் பற்றியும் பேசினார். தற்போதைய சூழ்நிலையில், ஜி 20 மாநாட்டின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. உலக நாடுகள் தற்போது ஒரே மாதிரியான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. 

G-20 Summit:ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

உணவுப் பயன்பாடு:
உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் நிலையானதாக இருக்கிறது. இத்தாலியில் நடைபெற்ற ஜி20 2021 உச்சி மாநாட்டில் நிலையான விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பசியைப் போக்குதல், வறுமை ஒழிப்பு ஆகியவை குறித்து பேசப்பட்டது. இதை இந்தியா உண்மையில் வரவேற்றது. இந்த முறை பிரதமர் தினை பற்றி பேசினார். தினை உற்பத்தியில் கவனம் செலுத்தினால், உலக பட்டினி பிரச்சனையை உண்மையில் தீர்க்க முடியும் என்று தெரிவித்தார். இதை இந்தியா கடுமையாக வற்புறுத்தி வருகிறது. 2023 ஆம் ஆண்டை தினைக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா 2018ஆம் ஆண்டில் இருந்து ஐநாவில் வலியுறுத்தி வந்தது. அதன்படி, ஐநாவும் அறிவிப்பை வெளியிட்டது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.  

"ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால் தானியங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. இந்தியா இந்த நிலையை மாற்ற உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. தினை மிகவும் வறட்சி சீதோஷணத்துக்கு உகந்தது. பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. மேலும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. தினை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் அதிக ஆற்றல் உள்ளது. ஆனால் கோதுமை மற்றும் அரிசி மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உலகத்திற்கு புதிய உணவு யுக்திகளை பிரதமர் வழங்கியுள்ளார்.


நிலக்கரி பயன்பாடு:
"சீதோஷண மாற்றம் மிகவும் முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில், இந்தியாவின் நிலை உண்மையில் ஆபத்தில் உள்ளது. எனவே, வளர்ந்த நாடுகளோ அல்லது மேற்கத்திய நாடுகளோ நம்மை நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூற முடியாது. ஏனென்றால், அந்த நாடுகள் ஏற்கனவே ஒரு நிலையை எட்டியுள்ளன. மாற்றத்திற்கும் நாம் அவ்வளவு எளிதில் தயாராக முடியாது. ஏனெனில், நம்மால் மாற்றத்தை அவ்வளவு எளிதாக செய்ய முடியாது. தொழில்துறை நவீனமயமாக்கல் நம்மிடம் இல்லை. மேலும், நமது நாடு மிகப் பெரிய மக்கள்தொகையின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். 

அதே நேரத்தில், இந்தியா தொடர்ந்து காலநிலை இலக்குகளை அடைந்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள், நமது ஆற்றல் தேவைகளில் குறைந்தது 50 சதவீதத்தை புதுப்பித்தல் முறையில் பயன்படுத்துவோம் என்று இந்தியா கூறுகிறது. இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள்.

டிஜிட்டல் மயமாக்கல்:

"மூன்றாவதாக, டிஜிட்டல் மீது இந்தியாவின் கவனம் இருக்கிறது. அதற்கான முக்கிய தளமாக ஜி 20 அமையும். யுபிஐ, ரூபே, ஆதார் ஆகியவற்றில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் வளர்ந்த நாடுகளில் நல்ல சந்தைகளைக் கொண்டுள்ளது. பிரான்ஸ், ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகள் இதில் ஆர்வம் காட்டியுள்ளன. பெரும்பாலான நாடுகள் ஜி 20 அமைப்பின் ஒரு அங்கமாக உள்ளன. மேலும் இந்தியா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறந்த வர்த்தகத்தை இந்த நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ள முடியும். 

அறிவுசார் சொத்துரிமை:
"நான்காவதாக, இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, கோவிட் தடுப்பூசிக்கு, அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களில், தள்ளுபடியை பெற முயற்சிக்கலாம். இந்தியா உலகம் முழுவதும் தடுப்பூசிகள் விநியோகிக்கிறது. இந்த தள்ளுபடியை குறிப்பாக ஐரோப்பிய யூனியன், லாபம் தொடர்பான காரணங்களுக்காக  விரும்பவில்லை.  ஆனால் இந்தியா இந்த தள்ளுபடியைப் பெறுவதற்கு வற்புறுத்த வேண்டும். வளரும் நாடுகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் மருந்தை ஏற்றுமதி செய்யலாம்'' என்றார். 

click me!