அமெரிக்க அதிபருக்கான 2024ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசுவாமி போட்டியிடுகிறார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபராக இருந்து வருகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்து இருக்கிறார்.
இவர் விருப்ப மனு அளித்ததில் இருந்து இந்தியா முழுவதும் இவர் யார்? பூர்வீகம் என்ன? இவரது பின்னணி என்ன? என்பது குறித்து அலச துவங்கிவிட்டனர். கடந்த முறை ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் அமெரிக்கா வாழ் இந்தியர் ஆவார். இவரது தாய் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். இவரைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா வாழ் இந்தியராக தேர்தல் களத்தில் நிற்கிறார் விவேக் ராமசுவாமி.
இவரது பெற்றோர் வி.ஜி. ராமசுவாமி, டாக்டர் கீதா ராமசுவாமி. இவர்கள் கேரளாவில் பாலக்காட்டில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வடக்கன்சேரியைச் சேர்ந்தவர்கள். விவேக்கின் பெற்றோர்கள் 1970 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் வடக்கன்சேரியில் இருந்து அமெரிக்காவில் இருக்கும் ஓஹியோ என்ற இடத்திற்கு புலம் பெயர்ந்தனர். விவேக் ராமசுவாமி அமெரிக்காவில் பிறந்தவர். ராமசுவாமி, கீதா தம்பதிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது பூர்வீக ஊரான வடக்கன்சேரிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் வந்திருந்த அவர்கள் ஒன்றரை மாதம் தங்கியிருந்த பின்னர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அமெரிக்கா திரும்பினர்.
US Presidential Election 2024: ட்ரம்ப்க்குப் போட்டியாக களமிறங்கத் தயாராகும் இந்திய வம்சாவளி இளைஞர்
தற்போது இவர்களது உறவினர்கள் அங்கு வசித்து வருகின்றனர். விவேக்கின் உறவினரும், வழக்கறிஞருமான வி எம் பிரசாத், டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''விவேக் மற்றும் அவரது பெற்றோர்கள் அமெரிக்காவில் வசித்தாலும் எங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். விவேக் யாலே பல்கலையில் படித்துக் கொண்டு இருக்கும்போது, பாலக்காடு வருவார். அப்போது பிரபல வழக்கறிஞராக இருந்து மறைந்த எனது தந்தை விவேக்கை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வார். ஐவி லீக்கின் உறுப்பினராக விவேக் இருக்கிறார். திருமணத்திற்குப் பின்னர் தனது மனைவியுடன் பாலக்காட்டிற்கு விவேக் வந்து இருந்தார். அவர்களது குல தெய்வம் சந்தான பகவதி கோவில். ஒலவக்கோட்டில் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
விவேக்கின் தந்தை வடக்கன்சேரியிலும் , பாலக்காட்டில் இருக்கும் அரசு விக்டோரியா கல்லூரியிலும் படித்து இருக்கிறார். பின்னர் கோழிக்கோட்டில் இருக்கும் ரீஜினல் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். விவேக்கின் தாய் மனநல மருத்துவராக இருந்துள்ளார். விவேக்கின் மனைவி அபூர்வா திவாரி ராமசுவாமி. இவர் ஓஹியோவில் இருக்கும் வெக்சனர் மருத்துவ மையத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் கேரளா வந்திருந்த விவேக்கின் பெற்றோர் சபரிமலை, மதுரை மற்றும் மூகாம்பிகை கோவில்களுக்கு சென்று அமெரிக்கா திரும்பியுள்ளனர். விவேக்கின் சித்தப்பா வடக்கன்சேரியில் இருக்கும் அவர்களது பூர்வீக இல்லத்தில் வசித்து வருகிறார்.
Salman Rushdie: எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைத் தாக்கியவருக்கு நிலத்தை பரிசளிக்கும் ஈரான்
பாக்ஸ் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் விவேக் அளித்திருந்த பேட்டியில், ''சீனாவின் எழுச்சி போன்ற வெளிப்புற அச்சுறுத்தல்களை அமெரிக்கா எதிர்கொள்கிறது. இந்த அச்சுறுத்தலுக்கு நாம் வெளியுறவுத்துறை வாயிலாக பதிலளிக்க வேண்டும். போர் என்பது அர்த்தமற்றது. இதற்கு சில தியாகங்கள் தேவைப்படும். சீனாவிடமிருந்து சுதந்திரம் மற்றும் முழுமையான துண்டிப்பு தேவைப்படும். எது எளிதானது இல்லை. சில சிரமங்கள் தேவைப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.