கடந்த 11 நாளாக இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே பெரிய அளவில் போர் நடந்து வருகிறது. ஹமாஸ் யார்? எதற்காக போராடுகின்றனர்? என்று பார்க்கலாம்.
செவ்வக வடிவத்தில் இருக்கும் மிக மிக சிறிய பகுதி காசா. ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி. இங்கு இருக்கும் இரண்டு அகதிகள் முகாம் மற்றும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை தெற்கு காசாவிற்கு அதாவது வாடி காசா எனப்படும் ஆற்றைக் கடந்து செல்லுமாறு இஸ்ரேல் கட்டளை பிறப்பித்துள்ளது. ஆனால், இதை நிராகரிக்க வேண்டும் என்று மக்களுக்கு ஹமாஸ் கூறி வருகிறது. இதையும் மீறி மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
காசா ஸ்டிரிப் பகுதியை ஹமாஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்கள் இங்கிருந்து வெளியேற்றுவது மனிதாபிமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐநா எச்சரித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் என்று இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர். வடக்கில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் தெற்கில் கான் யூனிஸ் என்ற இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனால் கான் யூனிஸ் பகுதியில் மக்கள் தொகை தற்போது பத்து லட்சத்தை தொட்டுள்ளது. மக்கள் சாலைகளில் படுத்து உறங்குகின்றனர். வடக்கு காசாவில் பெலனான் ஒட்டி இருக்கும் பகுதியில் 28 சமூகத்தைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: மகளின் உடலை கண்டறிய ஆப்பிள் வாட்சை பயன்படுத்திய தந்தை!
எகிப்துடன் ஒட்டி இருக்கும் காசாவின் இறுதியான வழித்தடம் ரஃபா என்று அழைக்கப்படுகிறது. இது எகிப்தின் பாலைவனத்தை ஒட்டிய பகுதி. இதுதவிர இஸ்ரேலுக்கும், காசாவுக்கும் இடையிலான இரண்டு வழித்தடங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. மொத்தமாக இவற்றை பார்க்கும்போது, தற்போது காசாவில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி கான் யூனிஸ். இந்த வழித்தடத்தில் இருந்து தான் மக்களும் வெளியேற முடியும். அத்தியாவசியப் பொருட்களும் காசாவுக்குள் வர முடியும். அதற்காகத்தான் இந்த வழித்தடத்தை எகிப்து திறந்து விட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
கான் யூனிஸ் பகுதி வழியாக வெளிநாட்டினர் தெற்கு காசாவில் இருந்து வெளியேறுவதற்கும், மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதற்கு ஏதுவாக ரஃபா பகுதியில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்து இருந்தார்.
எவ்வாறு ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும்?
ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. முதலில் ஹமாஸிடம் இருக்கும் 199 இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்க வேண்டும் என்று இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. எந்த நேரத்திலும் தரை வழித்தாக்குதலை காசாவின் வடக்குப் பகுதியில் நடத்துவதற்கு ஏதுவாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை எல்லையில் ராணுவ தளவாடங்களுடன் இஸ்ரேல் நிறுத்து வைத்துள்ளது. காசாவில் தங்கி இருக்கும் ஹமாஸ் கமாண்டர்கள் மற்றும் அவர்களது மையங்களில் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி அழிப்பதற்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறது. முக்கியமாக ஹமாஸின் சுரங்கப் பாதைகளை அழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இங்குதான் பிணைக் கைதிகளை ஹமாஸ் வைத்திருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிக்கிறது.
பிரம்மாண்ட சுரங்கங்கள்:
காசாவினர் பெரிய அளவில் சுரங்கங்களை கட்டி வைத்துள்ளனர். அதாவது பொதுமக்களுக்கு என்று ஒன்று, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஒன்று என்று இரண்டு சுரங்கப்பாதைகள் உண்டு. இந்த சுரங்கப்பாதை சுமார் 310 மைல், அதாவது 500 கி. மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள், மசூதிகள், பள்ளிகள், மற்றும் பொது இடங்கள் இந்த சுரங்கப்பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நெருக்கடியான சூழலில், போர் நடக்கும்போது இந்த சுரங்கப்பாதைகளுக்குள் மக்களும் மறைந்து கொள்ளலாம்.
தரை வழியாக சுரங்கப்பாதைக்குள் சென்று ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க ஒருபோதும் இஸ்ரேல் முடிவு எடுக்காது. இதற்கு மாறாக, வெடிபொருட்களை கொண்டு தாக்கி அழிக்கவே திட்டமிடும். தரை வழி தாக்குதல் மேற்கொண்டால், சுரங்கப்பாதைகளின் நுழைவுவாயிலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை ஹமாஸ் வைத்திருக்கலாம் என்பது இஸ்ரேலின் அனுமானம். காசாவின் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களை கடந்து செல்வதே இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹமாஸ் தீவிரவாதிகளும் சக்தி வாய்ந்த இஸ்ரேலுக்கு இணையான ஆயுதங்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
யார் இந்த ஹமாஸ்?
பாலஸ்தீனிய தீவிரவாத குழு தான் ஹமாஸ். இவர்கள்தான் 2007ஆம் ஆண்டில் இருந்து காசா ஸ்டிரிப் பகுதியை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் இஸ்ரேல் பகுதியில் இருக்கும் யூதர்களை வெளியேற்றிவிட்டு, இஸ்லாமியர்களை குடியேற்றம் செய்ய வேண்டும் என்று போராடி வருகின்றனர். காசாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் பலமுறை இஸ்ரேலுடன் போரிட்டு வந்துள்ளனர். இரண்டு முறை தரை வழித்தாக்குதளையும் காசாவில் இஸ்ரேல் நடத்தி இருக்கிறது. ''ஹமாஸ் தீவிரவாத அமைப்பு'' என்று அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகியவை முத்திரை குத்தின. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் நிதி மற்றும் ஆயுதங்கள் அளித்து பயிற்சியும் அளித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதை ஈரான் மறுத்து வருகிறது.
காசா ஸ்டிரிப்:
மத்தியதரைக்கடல், இஸ்ரேல், எகிப்து இடையே சிறிய பகுதியாக சுமார் 41 கி.மீட்டர் மட்டுமே பறந்து விரிந்த பகுதி காசா ஸ்டிரிப். முன்பு எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. பின்னர் 1967ல் இஸ்ரேல் கைப்பற்றியது. 2005 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் இருந்த தங்களது ராணுவத்தினரை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. உலகிலேயே சிறிய பகுதியில் அதிக மக்கள் வாழும் பகுதி இதுதான். சுமார் 22 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 75 சதவீதம் பேர் தஞ்சம் அடைந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
போருக்கு மத்தியில் இஸ்ரேல், ஜோர்டான் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவில் புடின்!!
எது பாலஸ்தீனம்:
வெஸ்ட் பாங்க் எனப்படும் மேற்குக் கரை மற்றும் காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் அனைத்தும் ரோமானிய காலத்திலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பைபிளில் யூத ராஜ்யங்களின் நிலங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல யூதர்கள் தங்கள் பண்டைய தாயகமாக இந்த நிலத்தைப் பார்க்கின்றனர்.
1948-ல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த நிலத்தை இன்னும் பாலஸ்தீனத்திற்கு சொந்தமானது என்றே பார்க்கின்றனர். மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றிற்கான அடையாள சொல்லாக பாலஸ்தீனம் என்றே கூறி வருகின்றனர். பாலஸ்தீனத்தின் அதிபராக இருப்பவர் மஹ்மூத் அப்பாஸ். இவர் தற்போது மேற்குக் கரையில் இருக்கிறார். இது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாலஸ்தீன அதாரிட்டி என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். ஃபதா என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வருகிறார். இவரது அரசியல் கட்சிக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் என்றும் ஒத்துப் போவதில்லை. எதிரிகளாக இருந்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழல்தான் தற்போது மத்திய கிழக்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.