Exclusive! இந்தியாவின் பாதுகாப்புக்கு எங்களால் ஆபத்து வராது: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய!

By Manikanda Prabu  |  First Published Feb 23, 2024, 11:34 AM IST

இந்தியாவின் பாதுகாப்புக்கு எங்களால் ஆபத்து வராது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய தெரிவித்துள்ளார்


இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்வதற்காக எந்தவொரு மூன்றாவது நாடும் தங்களது நிலத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என உறுதியளிப்பதாக, ஏசியாநெட் செய்தி இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தியா - மாலத்தீவு உறவுகளில் சிக்கல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு கடற்பரப்பில் சீனா தனது உளவு கப்பலை நிறுத்தியுள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை பாதிக்கும் வகையில் மூன்றாவது நாடு தனது நிலத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ரைசினா உரையாடலின் 9ஆவது பதிப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய கலந்து கொண்டார். அதற்கிடையே, ஏசியாநெட் செய்தி இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “பாதுகாப்பு கவலையைப் பற்றி இந்தியா கவலைப்படக்கூடாது. இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்து எங்களுக்குத் தெரியும். இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்வதற்காக எந்தவொரு மூன்றாவது நாடும் எங்களது நிலத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எனவே நேர்மையான கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் எந்தப் பிரச்சனையையும் நாம் சமாளிக்க முடியும்.” என்றார்.

பிரதமர் மோடி இன்று வாரனாசி பயணம்: ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை சீனா தனது உளவுக் கப்பலை இலங்கை கடற்பரப்பில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. அந்த கப்பலானது பிராந்தியத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படலாம் என்ற இந்தியாவின் அச்சத்திற்கு மத்தியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது கடற்பரப்பில் சீன ஆராய்ச்சிக் கப்பல் நுழைவதை இலங்கை தடை செய்தது. இந்த நடவடிக்கை, இலங்கைக்கு இந்தியா அளிக்கும் நிதி மற்றும் பொருள் உதவிகளுடன், இரு நாடுகளுக்கு இடையேயும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பாக கருதப்படுகிறது.

இலங்கையில் இன்னும் சீனாவின் செல்வாக்கு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய, “இரு நாடுகளும் எங்களது நண்பர்கள். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, எங்களுக்கு ஒரு சிறப்பு உறவு உள்ளது. அது ஒரு நாகரீக இணைப்பு. நீங்கள் 'மகாவம்சம்' படித்தால், இலங்கை மக்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது தெரியும். இலங்கை ஒரு பௌத்த நாடு; பௌத்தம் இந்தியாவில் இருந்து வந்தது. இந்தியா - இலங்கை இடையேயான உறவு பெரிய சகோதரன் மற்றும் சிறிய சகோதரனைப் போன்றது.” என்றார்.

“இலங்கையின் முக்கியமான வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. அதேபோல், மற்ற நாடுகளும் உள்ளன. அவையும் முக்கியமான நாடுகள்தான். எங்களது ஏற்றுமதிகளில் பெரும்பாலானவற்றைப் பார்த்தால், அவை ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்கின்றன. எனவே அவர்களும் முக்கியமான வர்த்தக பங்காளிகள்தான். சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தை பார்த்தால், அந்நாட்டுடனான இலங்கையின் வர்த்தகம் மிகவும் சிறியதே. இலங்கை மிகச் சிறிய நாடு, எங்களிடம் பெரிய சர்வதேச அரசியலுக்கான விருப்பங்கள் எதுவும் இல்லை. ஆனால், உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்து இலங்கை மக்கள் பயன்பெறுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.” என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்து பேசிய அவர், “நாங்கள் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை எங்களுக்கு ஒரு சிறப்பு உறவு உள்ளது. எனவே, சீனாவுடனான எங்கள் உறவைப் பற்றி இந்தியா கவலைப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது சீனாவுடன் மட்டுமல்ல. மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது.” என்றார்.

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை; முரண்டு பிடிக்கும் சீனா; உதவிக்கு வரும் அமெரிக்கா!!

சுற்றுலாத்துறையை இலங்கை பெருமளவில் நம்பியுள்ளது. அந்நாட்டு பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், கொரோனாவுக்கு பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிப்பை சந்தித்தது. எனவே, சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் பொருட்டு, இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு  அழைப்பு விடுத்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக, இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய ஏழு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அறிவித்தது.

“இலங்கை மிகவும் அழகான நாடு, அனைவருக்கும் ஏதோ ஒன்று இலங்கையில் உள்ளது. அழகான மலைகள் உள்ளன, ஸ்தூபிகள் உள்ளன, ராமாயணத் தடங்கள் உள்ளன, வனவிலங்குகள் உள்ளன, உலகின் மிகப்பெரிய விலங்கான நீல திமிங்கலம் உள்ள ஒரே நாடு இலங்கை, மறுபுறம் நிலப்பரப்பில் நீங்கள் யானையைப் பார்க்க முடியும். இந்தியர்கள் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்து அதன் அழகை ரசித்து எங்கள் விருந்தோம்பலை அனுபவிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.” என வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் உதவி குறித்து பேசிய அவர், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு எங்களது கடினமான நேரத்தில் இந்தியா எங்களுக்கு செய்த உதவியை நான் பாராட்டுகிறேன். எங்களிடம் எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, மருந்து இல்லை. அந்த சமயத்தில் இந்தியா 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனளித்தது. அந்த நேரத்தில் இலங்கைக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு அது உதவியது.” என்றார்.

நிதி ஆதரவு அளித்த பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அப்போது அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார். “சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுடன், இந்தியாவின் நிதியமைச்சர் இலங்கை அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இது பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கைக்கு சான்றாக உள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை வெறும் வார்த்தைகள் அல்ல; செயலின் மூலம் அவர் காட்டினார்.” எனவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தரக பாலசூரிய புகழாரம் சூட்டினார்.

click me!