இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை; முரண்டு பிடிக்கும் சீனா; உதவிக்கு வரும் அமெரிக்கா!!

By Dhanalakshmi G  |  First Published Feb 22, 2024, 12:38 PM IST

இந்தியா சீனா எல்லையில் கல்வான் பகுதியில் நேருக்கு நேர் இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதை தொடர்ந்து இருதரப்பிலும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையிலும் இன்னும் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உயர்மட்ட ராணுவப் பேச்சுக்களில் ஈடுபட்டு வந்தது. இந்திய வெளியுறவுத்துறை இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இருதரப்பு உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கு இடையே சுசுல் -மோல்டோ எல்லையில் நேற்று 21வது கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது. 

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தேப்சாங், தேம்சோக் ஆகிய இரண்டு இடங்களில் இருதரப்பு மோதல்களை தடுக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பதற்கு கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீதமுள்ள பகுதிகளில் முழுமையான அமைதியை கொண்டு வர வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நட்பு ரீதியிலும் சுமூகமான சூழ்நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் இது தொடர்பான தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

உங்களிடம் இந்திய டிரைவிங் லைசன்ஸ் இருக்கா..? அப்போ உடனே கிளம்புங்க இந்த நாடுகளுக்கு!

உறுதியான நிலையை எட்டும் வரை இரண்டு தரப்பிலும் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது என்று பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. எந்த சூழ்நிலையிலும், ராணுவ ரீதியிலான தீர்வு, அதிகாரிகள் மட்ட அளவிலான தீர்வு, தகவல் தொடர்பு மூலம் சிக்கல்களைத் தீர்ப்பது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  

சமீபத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அளித்திருந்த பேட்டியில், ''எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைதி நிலவி வருகிறது. அதேசமயம் கவனிக்கப்பட வேண்டிய சூழலும் உள்ளது. எந்த சூழலிலும் நிலைமையை சமாளிக்க நமது படைகள் தயார் நிலையில் உள்ளன. கல்வான் பகுதியில் மோதல் நடப்பதற்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

நிலவை நெருங்கிய ஒடிசியஸ்! முதல் முறை நிலவில் தரையிறங்க இருக்கும் தனியார் விண்கலம்!

பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வந்தாலும் சீன ராணுவம் லடாக்கின் மேற்கு மற்றும் உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் எல்லைகளான 3,488 கி.மீட்டர் தூரத்திற்கு 50,000 முதல் 60,000 வீரர்களையும், சிக்கிம் அருணாச்சலம் எல்லையில் 90,000 வீரர்களையும் நிறுத்தியுள்ளது. 

இதற்கிடையே பேட்டி அளித்திருக்கும் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமனே, ''லடாக் பகுதியில் 2020ல் நடந்த மோதலுக்குப் பின்னர் அமெரிக்க அரசு ஆயுதங்களை கொடுத்து உதவியது. இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இடங்களிலும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். நமக்கு உதவி தேவைப்பட்டால் அமெரிக்கா எந்த நேரத்திலும் உதவுவதற்கு தயாராக இருக்கிறது. பொதுவான மிரட்டல்களுக்கு இருதரப்பிலும் இணைந்து  செயல்பட வேண்டும் என்பது முக்கியமாகி இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். 

ஆனால், இன்னும் கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் லடாக் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே சிறிய சிறிய மோதல்களை உருவாக்கி வருகிறது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் கடந்த திங்கள் கிழமை முதல் நடந்து வந்த பேச்சுவார்த்தையில், தேப்சாங், தேம்சோக் ஆகிய இடங்களில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவதற்கு சீனா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லடாக் எல்லையை ஒட்டிய மீதமிருக்கும் எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவது அவசியமாகி இருக்கிறது. 

இந்தியா பசிபிக் கூட்டமைப்பின் சார்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

click me!