இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்
பாகிஸ்தானின் கல்வி ஆர்வலரும், 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய் பாலஸ்தீனத்தில் உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்துள்ளார். போர் குழந்தைகளையும் விடாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுகின்றனர். போருக்கான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. போர் குற்றங்கள் அதிகளவு நடக்கின்றன.
undefined
இந்த நிலையில், குழந்தை பருவத்தில் தாம் எதிர்கொண்ட தனது சொந்த பயங்கரவாத அனுபவத்தை விவரித்துள்ள மலாலா, “போர் ஒருபோதும் குழந்தைகளை விட்டுவிடாது. இஸ்ரேலில் தங்கள் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டவர்கள், வான்வழித் தாக்குதல்களில் இருந்து மறைந்திருப்பவர்கள், காசாவில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருப்பவர்கள் என எவரையும் விடாது.” என தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம்: 50000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழும் ஜோம்பி வைரஸ்கள்!
புனித பூமியில் அமைதி மற்றும் நீதிக்காக ஏங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் மக்களுக்காக வருந்துவதாகவும் மலாலா தெரிவித்துள்ளார்.
மலாலா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நேரில் பார்த்தபோது தனக்கு 11 வயது மட்டுமே என்று நினைவு கூர்ந்துள்ளார். கடந்தகால சோகமான விஷயங்களை நினைத்து பார்க்கும்போது, நடுவில் சிக்கிய பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய குழந்தைகளை தான் தமது நினைவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு கல்வி கோரியதற்காக பாகிஸ்தானில் தலிபான்களால் கடந்த 2012ஆம் ஆண்டில் மலாலா தலையில் சுடப்பட்டார். அப்போது 14 வயதான மலாலா இங்கிலாந்தின் குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இளம் வயது பாகிஸ்தான் ஆர்வலர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.