பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதி, ஒரு முழு கிப்புட்சையும் பாதிப்பிலிருந்து காப்பாற்றிய இஸ்ரேல் பாதுகாப்பு வீராங்கணையை அந்நாடு கொண்டாடி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரம் இந்த 25 வயது பெண்ணிடம் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தனது குழுவினரை வழிநடத்தி சுமார் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்ற அப்பெண், தனது கையால் மட்டுமே பயங்கரவாதிகள் 5 பேரை கொன்றுள்ளார். தனது துணிச்சலான செயலால், ஒரு முழு கிப்புட்சையும் (இஸ்ரேலில் பாரம்பரியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக்குழு வாழும் இடம்) காப்பாற்றிய அவரை இஸ்ரேல் நாடே ஹீரோவாக கொண்டாடி வருகிறது.
கிப்புட்ஸ் நிர் அமின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான இன்பார் லீபர்மேன் (25) எனும் பெண் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பணிபுரிந்து வருகிறார். ஸ்டெரோட் மற்றும் காசா பகுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் அந்த கிப்புட்ஸ் அமைந்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை தொடங்கிய சனிக்கிழமை அதிகாலையில் இன்பார் லீபர்மேன் வெடி சத்தங்களை கேட்டுள்ளார். வழக்கமான ராக்கெட் தாக்குதல்களின் போது கேட்கப்பட்ட சத்தத்தை விட வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த அவர், ஆயுதக் களஞ்சியத்தை உடனடியாக திறந்து, 12 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புக் குழுவிற்கு துப்பாக்கிகளை விநியோகித்தார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு மத்தியில், மிகவும் மன உறுதியுடன் தீர்க்கமாக அக்குழுவை அவர் ஒருங்கிணைத்தார்.
இஸ்ரேல் போர் மட்டுமல்ல; நாஸ்ட்ரடாமஸ் கணித்த அடுத்த பெரிய விஷயம் இதுதான்!
தனது அணியை கிப்புட்ஸ் குடியேற்றம் முழுவதும் சரியான நிலைகளில் நிறுத்திய இன்பார் லீபர்மேன், பயங்கரவாதிகளுக்கு எதிராக பல்வேறு யுக்திகளை தனி ஆளாக கையாண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அந்த சண்டையில், லிபர்மேன் மட்டும் தனி ஆளாக ஐந்து பயங்கரவாதிகளை கொன்றுள்ளார். அவரது குழுவினர் மேலும் 20 பேரை சுட்டுக் கொன்று, அந்த கிப்புட்ஸை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம், அருகில் இருந்த கிப்புட்ஸ் பெரும் இழப்பை சந்தித்தது.
“இது ஆச்சரியமாக இருந்தது. எனது கணவர் பாதுகாப்பு பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர்கள் அதிக உயிரிழப்புகளைத் தடுத்தனர்.” என நிர் அமின் கலாச்சார ஒருங்கிணைப்பாளர் இலிட் பாஸ் தெரிவித்துள்ளார்.
“வெடி சத்தத்தை கேட்டவுடன் பாதுகாப்பு குழுவினர் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டனர். இன்பார் லீபர்மேனை தொடர்பு கொண்டனர். மேலும், தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஆனால், இன்பார் லீபர்மேன் காத்திருக்க வேண்டாம் என்று ஒரு முடிவை எடுத்து உடனடியாக செயல்பட்டார். மிகவும் விரைவாக முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் டஜன் கணக்கான உயிரிழப்புகளை அவர்களால் தடுக்க முடிந்தது.” என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதி, ஒரு முழு கிப்புட்சையும் பாதிப்பிலிருந்து காப்பாற்றிய இஸ்ரேல் பாதுகாப்பு வீராங்கணையான இன்பார் லீபர்மேனின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.