அமெரிக்காவே கொரோனாவை அழிக்க முடியாமல் அதிகமான உயிர்களை இழந்துவரும் நிலையில், சீனாவுடன் எல்லையை பகிரும் அண்டை நாடான வியட்நாம் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை வென்றுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோன வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் உலகம் முழுதும் இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டன், இத்தாலி, ஸ்பெய்ன், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் நிலையில், சீனாவுடன் எல்லையை பகிரும் அண்டை நாடான வியட்நாம், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளது.
வெறும் 1.7 கோடி மக்கள் தொகையை கொண்ட வியட்நாமில் ஜனவரி மாதம் முதல் கொரோனா பாதிப்பு உறுதியானது. உடனே சுதாரித்துக்கொண்ட வியட்நாம் அரசு, அப்போதே பரிசோதனை மற்றும் தடுப்பு பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கொரோனா பாதிப்பு உறுதியானதுமே விமானங்களிலிருந்து வந்தவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தது வியட்நாம் அரசு. மேலும் கொரோனா விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஊடகங்கள் உள்ளிட்ட பல வகைகளில் ஏற்படுத்தியதுடன், தனிமனித இடைவெளியின் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் தனிமனித இடைவெளியை உறூதி செய்தது.
சீனாவின் அண்டை நாடான வியட்நாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமே 270 பேர் மட்டுமே. அவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டதற்கு காரணம், வியட்நாம் அரசின் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தான். கொரோனா பாதிப்பு உறுதியானதுமே, விரைந்து செயல்பட்ட வியட்நாம் அரசு, சர்வதேச எல்லைகளை மூடியது. பொதுமுடக்கத்தை அமல்படுத்தி, அதை மீறுவோருக்கு அபராதம் விதித்தது.
கொரோனா பரவ ஆரம்பித்ததுமே, மருத்துவ உபகரணங்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்காமல், உள்நாட்டிலேயே உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதன்மூலம் கொரோனா பரிசோதனைகளை துரிதமாக மேற்கொள்ள முடிந்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் பேராதரவு அளித்தனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை அரசு இலவசமாக வழங்கியது.
வியட்நாம் அரசின் சீரிய சிறப்பான நடவடிக்கைகளாலும் மக்களின் ஆதரவாலும், அங்கு பாதிக்கப்பட்ட 270 பேரில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. சீனாவுடன் எல்லையை பகிர்ந்துகொண்டு, அதன் அண்டை நாடாக இருந்த போதிலும், வியட்நாமின் சிறப்பான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால் அந்நாடு கொரோனாவிலிருந்து தப்பியது.