இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு தீர்வு காண தீவிரமாக செயலாற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், அந்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு தீர்வு காண தீவிரமாக செயலாற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இனம், பாலினம் அடிப்படையிலான வன்முறைக்கு மன்னிப்பே கிடையாது என்று கூறிய வெள்ளை மாளிகை, இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாகக் கூறியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடைபெறும் தொடர் தாக்குதல்கள் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. அந்நாட்டில் நடைபெற்ற தாக்குதலால் நடப்பாண்டில் இதுவரை மட்டும் இந்திய மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூலோபாய தகவல்தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “நிச்சயமாக இனம் அல்லது பாலினம் அல்லது மதம் அல்லது வேறு எந்த காரணியையும் அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளுக்கு எந்த மன்னிப்பும் இல்லை. இது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்றார்.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெற்றோரின் அச்சத்தைப் போக்கும் வகையில், அதிபர் ஜோ பைடனும், அவரது நிர்வாகமும் நிலையை சரி செய்ய கடுமையாக உழைத்து வருவதாக அவர் கூறினார். “இந்த விவகாரத்தில் அதிபரும், நிர்வாகமும் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர். அந்த வகையான தாக்குதல்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ஜான் கிர்பி கூறினார்.
அமெரிக்க ரக்பி பேரணியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, குறைந்தது 21 பேர் காயம்
சின்சினாட்டியில் உள்ள ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி மற்றும் இந்தியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தின் நீல் ஆச்சார்யா உட்பட ஐந்து இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ஓபன் டோர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்காவில் படிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்திய மாணவர்கள் உள்ளனர்.
உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்து, 2022-23 கல்வியாண்டில் 2,68,923 மாணவர்கள் என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், 140,000 மாணவர் விசாக்களை வழங்கியது. இது உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விசாக்களை வழங்கி தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்காவில் தாக்குதலுக்கு உள்ளாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் நலன், அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.