Egypt Gaza border crossing: இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; காத்திருக்கும் அதிர்ச்சி!!

By Dhanalakshmi G  |  First Published Oct 18, 2023, 10:38 AM IST

இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செல்லவிருக்கும் நிலையில் காசாவின் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான போர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய ஏவுகணை தாக்குதல் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.  

Tap to resize

Latest Videos

இதற்கிடையில், இன்று இஸ்ரேலில் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். மேலும் அரபு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 நோயாளிகள் உயிரிழந்து இருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய ஜிஹாத் என்றால் என்ன? காசா மருத்துவமனை தாக்குதலுக்கு குற்றம்சாட்டப்படுவது ஏன்?

இதையொட்டி புதன்கிழமை திட்டமிடப்பட்ட உச்சிமாநாட்டை ஜோர்டான் ரத்து செய்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் பிராந்தியத்தை பதற்றத்துக்கு தள்ளிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்று டெல் அவிவ் வரும் பைடனுக்கு மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை வெள்ளை மாளிகையும் உறுதிபடுத்தியுள்ளது. இன்று ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டாஹ் எல்சிசி ஆகியோரையும் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அரபு நாட்டுத் தலைவர்கள் ஜோ பைடன் உடனான சந்திப்பை ரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

காசா மருத்துவமனை தாக்குதலில் 500 பேர் பலி: யார் காரணம் என மாறிமாறி குறை கூறும் இஸ்ரேல் - ஹமாஸ்!

தற்போது காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி இருப்பது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் என்று கூறப்படும் நிலையில், யார் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்பினருக்கு ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். பாலஸ்தீனத்தில் இருந்துதான் காசா மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி வருகிறது. 

"காசாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனை மீதான வெடிகுண்டு தாக்குதல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர் இழப்புகளால் நான் ஆத்திரமும், வருத்தமும் அடைந்துள்ளேன். போரின் போது மக்களின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. மருத்துவ ஊழியர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்'' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதலுக்கு கத்தார், எகிப்து, ஈரான், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநாவும் கண்டித்துள்ளது.

click me!