பல சந்தர்ப்பங்களில் ஹமாஸ் - இஸ்லாமிய ஜிகாத் இரண்டும் இஸ்ரேலுக்கு எதிராக கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளன. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய ஜிகாத் தனித்து செயல்பட்டுள்ளது.
காசா மருத்துவமனை தாக்குதலுக்கு பாலஸ்தீனிய போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்லாமிய ஜிஹாத் ஏவிய ராக்கெட் இலக்கை அடையாமல் தோல்வி அடைந்து மருத்துவமனை மீது விழுந்திருக்கிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் மருத்துவமனைக்கு அருகில் எந்த வான்வழி நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலின் ராக்கெட்டுகள் அல்ல என்றும் இஸ்ரேலிய ராணுவ ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
undefined
இதற்கு பதில் அளித்துள்ள இஸ்லாமிய ஜிஹாத் இஸ்ரேல் ராணுவமே இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிக்கப் பார்க்கிறது என்று சொல்கிறது. இந்த இஸ்லாமிய ஜிஹாத் ஹமாஸ் பயங்கரவாதக் குழு அல்ல. இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் மற்றொரு குழுதான் இஸ்லாமிய ஜிகாத்.
இஸ்லாமிய ஜிஹாத் என்றால் என்ன?
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இஸ்லாமிய ஜிஹாத் காஸாவை தளமாகக் கொண்ட ஒரு ஆயுதக் குழு. இது காஸாவில் இரண்டாவது பெரிய ஆயுதக் குழுவாகும். இந்தக் குழு 1980 களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக காசா பகுதியில் தொடங்கப்பட்டது.
இஸ்லாமிய ஜிஹாத் தன்னிச்சையாக இயங்குகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சில தகவல்களின்படி, ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத் இரண்டும் ஈரானிடம் இருந்து நிதியும் ஆயுதங்களும் பெற்று வருவதாகவும் தெரிகிறது. ஹமாஸ் போலவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாகக் அறிவிக்கப்பட்டுள்ளன.
காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பெரும்பாலும் கூட்டாக இயங்கி வந்தாலும், சில சமயங்களில் பதட்டமான நிலை உருவாகும். குறிப்பாக, சில நேரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்லாமிய ஜிஹாத்திற்கு ஹமாஸ் அழுத்தம் கொடுக்கும்.
கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் இரண்டு குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிராக கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளன. ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஹமாஸ் ஆதரவு இல்லாமல், இஸ்லாமிய ஜிஹாத் மட்டும் தனியே இஸ்ரேலுடன் மோதி இருக்கிறது என நியூயார்க் டைம்ஸ் அறிக்கை ஒன்றில் கூறப்படுகிறது.