டெங்கு நோய்த்தொற்று: சிங்கப்பூரில் இரண்டு பேர் உயிரிழப்பு!

By Manikanda Prabu  |  First Published Jul 26, 2023, 3:16 PM IST

சிங்கப்பூரில் டெங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்


நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை சிங்கப்பூரில் டெங்கு நோய்த்தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் டெங்குவால் ஏற்பட்ட முதல் இரண்டு உயிரிழப்புகள் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2022 தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் டெங்கு நோய்த்தொற்றால் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Latest Videos

undefined

அதேசமயம், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாத் தொற்று சிங்கப்பூரில் குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 1,989 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 15.7 சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை 213 டெங்கு தொற்றுக்கான கிளஸ்டர்களாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் அதில் 170 கிளஸ்டர்கள் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், அடையாளம் காணப்பட்ட கிளஸ்டர்களின் எண்ணிக்கை சுமார் 34 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் சுமார் 5,300 என்ற அளவில், கொசு இனப்பெருக்க வாழ்விடங்களின் எண்ணிக்கை உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோதமான முகமூடிகளை அணியும் சீனர்கள்.. சீனாவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன ஆச்சு?

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், வீடுகளில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் முதல் ஐந்து இடங்களாக, வீட்டுப் பாத்திரங்கள், பூந்தொட்டி தட்டுகள், தட்டுகள், குவளைகள், கேன்வாஸ், பிளாஸ்டிக் தாள்கள், அலங்காரக் கொள்கலன், குப்பைத் தொட்டிகள் ஆகியவை உள்ளதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வடிகால்கள், கைவிடப்பட்ட பாத்திரங்கள், வீட்டுத் தோட்டங்களில் உள்ள வடிகால், மூடப்பட்ட பார்க்கிங் வடிகால்கள் ஆகியவற்றை பொது இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

click me!