
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குடும்பத்திற்குச் சொந்தமான டிரம்ப் ஆர்கனைசேஷன் (Trump Organisation) நிறுவனம், சர்வதேச சொகுசு ரியல் எஸ்டேட் டெவலப்பரான டார் குளோபல் (Dar Global) உடன் இணைந்து, மாலத்தீவில் தனது முதல் சொகுசு ஹோட்டலை அறிமுகப்படுத்த உள்ளது.
'டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் மாலத்தீவு' (Trump International Hotel Maldives) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, கடற்கரைகளிலும் மற்றும் தண்ணீரிலும் அமைக்கப்படும் வில்லாக்களை உள்ளடக்கியது.
மாலத்தீவின் தலைநகரான மாலேயில் இருந்து வேகப் படகு மூலம் 25 நிமிடப் பயணத்தில் சென்றடையக்கூடிய இடத்தில் அமைந்துள்ளது. 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான 80 வில்லாக்கள் இதில் இடம்பெறுகின்றன.
வெளியிடப்பட்ட கிராபிக்ஸ் படங்களில், இந்த வில்லாக்கள் வளைந்த நீச்சல் குளங்கள் மற்றும் சுற்றிலும் பெரிய கண்ணாடிக் கதவுகளைக் கொண்டுள்ளன. இது, விருந்தினர்களுக்குக் கடலின் அழகிய காட்சிகளை முழுமையாக ரசிக்க வாய்ப்பளிக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகன்களான எரிக் டிரம்ப் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் டிரம்ப் ஆர்கனைசேஷன் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர்களாகச் செயல்படுகின்றனர்.
“டார் குளோபல் உடன் இணைந்து மாலத்தீவில் டிரம்ப் பிராண்டைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டோக்கனைசேஷன் (tokenisation) ரியல் எஸ்டேட் முதலீட்டில் ஒரு புதிய வழிகாட்டியாக அமையும்," என்று எரிக் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சொகுசு ஹோட்டல் துறையில் டோக்கனைசேஷன் முறையைப் பின்பற்றுவதுதான் இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம். ஆகும். டோக்கனைசேஷன் என்றால் என்ன? இந்த முறையில், முதலீட்டாளர்கள் டிஜிட்டல் முறையில் சொத்தின் சில பகுதிகளை (டோக்கன்களாக) வாங்கவும் விற்கவும் முடியும்.
டார் குளோபல் தலைமைச் செயல் அதிகாரி ஜியாத் எல் சார் பேசுகையில், "டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் மாலத்தீவு திட்டத்தின் வளர்ச்சிக்கு டோக்கனைசேஷன் மாடலை பயன்படுத்துவது, உலகளாவிய அளவில் இதுவே முதல் முறையாகும். இது ஆடம்பர வசதிகளையும் புதுமையான தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்கிறது" என்று குறிப்பிட்டார்.
டிரம்ப் ஆர்கனைசேஷன் ஏற்கனவே அயர்லாந்து, நியூயார்க், பாலி, துபாய் மற்றும் ரியாத் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் நிர்வகித்து வருகிறது. மாலத்தீவு சொகுசு ஹோட்டலும் அந்த வரிசையில் சேரும்.