
ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Klimt) வரைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று, செவ்வாய்க்கிழமை இரவு (நவம்பர் 18) நியூயார்க்கில் நடந்த சோதேபிஸ் (Sotheby's) ஏலத்தில் $236.4 மில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹1,972 கோடி) என்ற மாபெரும் தொகைக்கு விற்பனையாகி, கலை உலகில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த ஓவியம், ஏலத்தில் விற்கப்பட்ட கலைப் படைப்புகளில் இரண்டாவது மிக அதிக விலை கொண்டதாக மாறியுள்ளது. அத்துடன், இதுவரையில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த நவீன ஓவியம் (Modern Art) என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
‘எலிசபெத் லெடெரரின் உருவப்படம்’ (Portrait of Elisabeth Lederer) என்ற தலைப்பைக் கொண்ட இந்த ஓவியம், 1914 மற்றும் 1916 ஆண்டுகளுக்கு இடையில் வரையப்பட்டது.
இது சுமார் ஆறு அடி உயரம் கொண்ட ஒரு பெரிய கலைப் படைப்பாகும். க்ளிம்டின் புரவலர்களில் ஒருவரின் மகளான எலிசபெத் லெடெரர், ஒரு சீன அங்கி (Chinese Robe) அணிந்து நிற்பதை இந்த ஓவியம் சித்தரிக்கிறது.
இந்த ஓவியம் சக்தி, அழகு மற்றும் குறியீட்டுத் தன்மைகளை (symbolism) வெளிப்படுத்துவதாக சோதேபிஸ் நிறுவனம் விவரிக்கிறது.
இந்த ஓவியம் பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது இந்த ஓவியத்தை நாஜிக்கள் கைப்பற்றினர். இந்த ஓவியம் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டபோது, அழிவின் விளிம்புக்கே சென்றது.
எனினும், எப்படியோ தப்பிப் பிழைத்த இந்த ஓவியம், பின்னர் குஸ்தாவ் க்ளிம்ட்டின் சகோதரரான எரிச் (Erich) என்பவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டில், எரிச் இந்த ஓவியத்தை விற்க முடிவு செய்தார். பின்னர், இந்த ஓவியம் எஸ்டீ லாடரின் (Estée Lauder) வாரிசான லியோனார்ட் ஏ. லாடரின் (Leonard A Lauder) வசம் வந்தது. அவர் இந்த ஓவியத்தை நியூயார்க்கில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தார், அவ்வப்போது கண்காட்சிகளுக்காக கேலரிகளுக்குக் கடன் கொடுத்தார். லாடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானதைத் தொடர்ந்து, இந்த புகழ்பெற்ற ஓவியம் மீண்டும் ஏலத்திற்கு வந்தது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில், ஆறு ஏலதாரர்கள் சுமார் 20 நிமிடங்கள் தீவிரமாகப் போட்டியிட்டனர். எனினும், இறுதியில் ஓவியத்தை வாங்கியவரின் அடையாளத்தை சோதேபிஸ் நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது.