
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் தலைவர் சௌத்ரி அன்வாருல் ஹக் (Chaudhry Anwarul Haq) அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவை செங்கோட்டையில் இருந்து காஷ்மீரின் காடுகள் வரை தாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹக்கின் இந்தக் கருத்துக்கள், பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்வதாக அமைந்துள்ளது.
ஹக் குறிப்பிட்டுள்ள செங்கோட்டை பற்றிய குறிப்பு, நவம்பர் 10 அன்று டெல்லியின் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பைக் குறிக்கிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி, டாக்டர் உமர் உன் நபி, என்பவர் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) உடன் தொடர்புடைய 'ஒயிட் காலர்' பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
ஹக் குறிப்பிட்ட 'காஷ்மீரின் காடுகள்' என்பது, கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் (Baisaran Valley) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் குறிக்கிறது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஹக், "நீங்கள் பலுசிஸ்தானை ரத்தம் சிந்த வைக்கிறீர்கள் என்றால், நாங்கள் இந்தியாவை செங்கோட்டையில் இருந்து காஷ்மீரின் காடுகள் வரை தாக்குவோம் என்று நான் முன்பே சொன்னேன். அல்லாஹ்வின் அருளால், நாங்கள் அதைச் செய்துவிட்டோம், அவர்களால் இன்னமும் உடல்களை எண்ண முடியவில்லை," என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் தனது பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் திசை திருப்ப, பலுசிஸ்தானில் ஏற்படும் அமைதியின்மைக்கு இந்தியா தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததும் அடங்கும். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தினால் மட்டுமே ஒப்பந்தத்தை புதுப்பிப்போம் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.