
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை இந்தியாவிடம் இருந்து நாடு கடத்தி கொண்டுவர, இன்டர்போலின் (Interpol) உதவியை நாட வங்கதேச இடைக்கால அரசு தயாராகி வருகிறது.
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமல் ஆகியோருக்கு கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 17, 2025) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் (Red Notice) கோருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தீர்ப்பாயத்தின் வழக்கறிஞர் காஸி எம்.எச். தமீம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கைது வாரண்டின் அடிப்படையில் ரெட் கார்னர் நோட்டீஸ் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது தண்டனை வாரண்டின் அடிப்படையில் புதிய ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடக் கோரி வெளியுறவுத் துறை மூலம் இன்டர்போலிடம் கேட்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதே வழக்கில் தொடர்புடைய முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், அரசுத் தரப்பு சாட்சியாக மாறியதால், அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை தீர்ப்புக்குப் பிறகு, ஷேக் ஹசீனா மற்றும் கமலை நாடு கடத்துமாறு இந்தியாவுக்கு முறையாக கடிதம் எழுதப்படும் என்று வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறியிருந்தார்.
அதன்படி, வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை, இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டிய குறிப்பை (Note) இறுதி செய்து வருவதாகவும், இது ஓரிரு நாட்களில் அனுப்பப்படலாம் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன், டிசம்பர் 2024-இல் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியபோது, எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
வங்கதேசம் விடுத்த கோரிக்கைகளுக்கு இந்தியா நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும், தீர்ப்பின் பின்னர் வெளியுறவு அமைச்சகம் ஒரு நடுநிலையான அறிக்கையை வெளியிட்டது. அதில், வங்கதேச மக்களின் நலன்களுக்காக இந்தியா உறுதியுடன் இருப்பதாகக் கூறியுள்ளது.
2024 ஜூலை-ஆகஸ்ட் மாணவர் போராட்டங்களால் ஷேக் ஹசீனா அதிகாரத்தை விட்டு விலகிய பிறகு அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அவர் தற்போது புது டெல்லியில் தங்கியிருப்பதாகவும், அசாதுஸ்ஸமான் கான் கமலும் இந்தியாவில் எங்கோ தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.