அமெரிக்கா ஆர்டர் செய்திருக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்றும் அதை பிரதமர் மோடியின் அரசு தீவிரமாக கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் பேசியதாக குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவி இதுவரை 64,667 உயிர்களை பறித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவில் தான் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயால் வல்லரசு அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் அதிபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று இந்திய பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் தொலைபேசியில் ஆலோசனை செய்தனர். அப்போது கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒன்றிணைந்து போராடுவது என முடிவெடுத்துள்ளனர். இதனிடையே நேற்று அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து தெரிவித்தார். அப்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உதவிக் கொள்வது என்று முடிவெடுத்திருப்பதாக கூறினார்.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய சொல்லி கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் 1.5 பில்லியன் மக்கள் இருப்பதால் அதிக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை உற்பத்தி செய்யும்படியும் கூறியதாக தெரிவித்தார். அமெரிக்கா ஆர்டர் செய்திருக்கும் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்றும் அதை பிரதமர் மோடியின் அரசு தீவிரமாக கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் பேசியதாக குறிப்பிட்டார்.
அண்மையில் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரை செய்தது. அதேபோல அமெரிக்க அதிபர் ட்ரம்பும் மலேரியாவிற்கு பயன்படுத்தும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா நோய் தடுப்பு மருந்தாக பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.