சீனாவே காரணம்..! மீண்டும் மீண்டும் குற்றம் சாற்றும் ட்ரம்ப்..!

By Manikandan S R SFirst Published Mar 24, 2020, 9:07 AM IST
Highlights

கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தெரிந்த சீனா அது தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளுக்கு வைரஸின் சீற்றம் குறித்து முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லாத போது சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால், உலகம் முழுவதும் பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,270 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, இந்தியா என உலகத்தின் 165 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

அமெரிக்காவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 35,418 பேர் அங்கு பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 470 ஐ கடந்துள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா வீரியம் அதிகரித்திருப்பதன் காரணம் சீனா தான் அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். கொரோனா வைரஸ் குறித்து மற்ற நாடுகளிடம்  சீனா பகிர்ந்து கொள்ளாமல் போனதாலேயே அதற்கான விலையை தற்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று முன்பு கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த சீனா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியது. இந்தநிலையில் மூன்றாவது முறையாக சீனாவை அமெரிக்க அதிபர் குற்றம் சாற்றியுள்ளார். வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தெரிந்த சீனா அது தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளுக்கு வைரஸின் சீற்றம் குறித்து முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லாத போது சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால், உலகம் முழுவதும் பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

click me!