இம்ரான் கானின் வழக்கறிஞரும் சில வாரங்களுக்கு முன்பு சிறையில் அவர் ஸ்லோ பாய்சன் கொடுத்து மெல்ல மெல்ல கொலை செய்யப்படலாம் என்று கூறியிருந்தார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறைக்குள்ளேயே தன்னை விஷம் வைத்துக் கொல்லும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளார். சிறையில் இருந்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இதனை அவர் கூறியிருக்கிறார்.
மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடுமாறும் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கானின் அறிக்கையை அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியதும் அவர் மீதான பல்வேறு ஊழல் வழக்குகளில் சாதகமான நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதையும் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.
"கடந்த சில நாட்களில், ஒட்டுமொத்தமாக சட்டம் கேலிக்கூத்தாகி இருப்பதைக் காண்கிறோம்" என்று தெரிவித்துள்ள அவர், "அரசு நிறுவனங்களை அழிப்பதன் மூலம் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை மீண்டும் அரசியலுக்குத் திரும்ப அனுமதிக்கிறார்கள்" என்று சாடியுள்ளார். இதனை பாகிஸ்தான் நீதித்துறையின் முழுமையான சரிவு என்றும் இம்ரான் கான் கூறியுள்ளார்.
மனிதநேய அடிப்படையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
மேலும், தன் மீதான அனைத்து வழக்குகளும் முற்றிலும் போலியானவை என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தேர்தல் முடியும் வரை அல்லது நீண்ட காலத்துக்குத் தன்னைச் சிறையில் அடைப்பதற்காகவே தன் மீதான குற்றச்சாடுகள் இட்டுக்கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வளர்ந்துவரும் அரசியல் விழிப்புணர்வு மற்றும் சதித் திட்டங்களுக்கு எதிரான போக்கு பாகிஸ்தான் அரசை பயமுறுத்துவதாகவும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சனம் செய்துள்ளார்.
தனது உயிரைப் பறிக்க ஏற்கனவே இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறிய இம்ரான் கான், நாட்டை விட்டு வெளியேற மறுத்ததால், "ஸ்லோ பாய்சன்" மூலம் தன்னைக் கொல்ல மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்று குற்றம் சாட்டியுள்ளார். "அவர்கள் ஏற்கெனவே இரண்டு முறை என் உயிரைப் பறிக்க பகிரங்கமாக முயன்றுள்ளனர். நான் எனது நாட்டை விட்டு வெளியேற ஒப்புக் கொள்ளாததால் நிச்சயமாக என் உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று இம்ரான் கான் கூறியிருக்கிறார்.
தோஷ்கானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இம்ரான் கானின் வழக்கறிஞரும் சில வாரங்களுக்கு முன்பு சிறையில் அவர் ஸ்லோ பாய்சன் கொடுத்து மெல்ல மெல்ல கொலை செய்யப்படலாம் என்று கூறியிருந்தார்.
காசாவில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு கேரண்டி கிடையாது! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு