கொரோனாவை விட கொடிய நோய்க்கு உலகம் தயாராக வேண்டும் என்று WHO தலைவர் எச்சரித்துள்ளார்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனாவை விட கொடிய நோய்க்கு உலகம் தயாராக வேண்டும் என்று எச்சரித்தார். மேலும் பேசிய அவர் “ மற்றொரு நோய்க்கிருமியின் அச்சுறுத்தல் இன்னும் ஆபத்தான ஆற்றலுடன் வெளிவருகிறது. இந்த நோயால், அதிகமானோர் உயிரிழக்கக்கூடும். உலக நாடுகள் இதை புறந்தள்ளிவிட முடியாது. அடுத்த உலகளாவிய நோய் வந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொல்ல முயன்ற இந்திய இளைஞர்.. வெள்ளை மாளிகையில் பரபரப்பு சம்பவம்
பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்பது முதன்மை நோய்களை உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. சிகிச்சையின் பற்றாக்குறை அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தும் திறன் காரணமாக அவை மிகவும் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அதானம் “ கடந்த 3 ஆண்டுகளில் கோவிட் நம் உலகத்தையே தலைகீழாக மாற்றியது. உலகம் கோவிட் -19 தொற்றுநோய்க்கு தயாராக இல்லை, இது ஒரு நூற்றாண்டின் மிகக் கடுமையான சுகாதார நெருக்கடி. ஏறக்குறைய 7 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் இறப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது - குறைந்தது 20 மில்லியன் பேர் இறந்திருக்கலாம். எனவே, செய்ய வேண்டிய மாற்றங்களை நாம் செய்யாவிட்டால், யார் செய்வார்கள்? இப்போது செய்யாவிட்டால், எப்போது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் "இந்த தலைமுறையிலிருந்து [ஒரு தொற்றுநோய் உடன்படிக்கைக்கு] ஒரு அர்ப்பணிப்பு முக்கியமானது, ஏனென்றால் இந்த தலைமுறை ஒரு சிறிய வைரஸ் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை அனுபவித்தது" என்று தெரிவித்தார்.
2019-ம் ஆண்டில் சீனாவின் உஹான் மாகாணத்தில் முதன்முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்தது. முதல் அலை, 2வது அலை, 3வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் அவ்வப்போது டெல்டா, ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் கொரோனா தொற்றுநோய் இனி சுகாதார அவசரநிலை அல்ல என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இனி வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது.. வெளியான புதிய உத்தரவு