சீனாவின் தலைமையை கேள்வி கேட்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்..!! சீனா பகிரங்க எச்சரிக்கை..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 21, 2020, 7:41 PM IST

அவர்கள் முதலில் சீனாவுக்கு எதிரான பனிப்போர் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும், அந்த மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். அவர்கள் சீனாவின் வளர்ச்சியை சரியாக கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.


பனிப்போர் மனநிலையிலிருந்து  அமெரிக்கா வெளிவரவேண்டும் எனவும். சீனாவின் தலைமையை கேள்வி கேட்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாகவே அமெரிக்கா-சீனா இடையேயான பனிப்போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பின்னர் கொரோனா வைரஸ் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது.  இருநாடுகளும் கடந்த சில மாதங்களாக மாறிமாறி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா பனிப்போர் மனநிலையிலிருந்து அமெரிக்கா விடுபட வேண்டுமெனவும், ட்ரம்ப் நிர்வாகம் தங்கள் நாட்டு தலைமையைக் கேள்வி கேட்பதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளது. ஆரம்பம் முதலே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, கொரோனா விவகாரத்தில் சீனாவை கடுமையாக வார்தைகளால் விமர்சித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

மேலும், உலகளாவிய புவியியலை  மாற்ற சீனா சதி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனா உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது என்றும், சீனாவுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் அஸ்பர் சீனாவை பற்றி கூறுகையில், சீனா அமெரிக்க நலன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், ரஷ்யாவை விட அமெரிக்காவிற்கு சீனா மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாடு என்றும், இது ஒரு மோசமான சவால் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். சீனா பல்வேறு வழிகளில் அமெரிக்காவுக்கு பிரச்சினைகளை உருவாக்கி வருவதாகவும்,  இப்போது அதை சமாளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அஸ்பர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் முதல் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் வரை தொடர்ந்து சீனாவை மிரட்டி வருவதால், சீனா கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளது. இந்நிலையில்  அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவில் சிலர் சீனா-அமெரிக்கா குறித்து ஏற்கனவே தெரிவித்த கருத்தை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

 

அவர்கள் முதலில் சீனாவுக்கு எதிரான பனிப்போர் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும், அந்த மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். அவர்கள் சீனாவின் வளர்ச்சியை சரியாக கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு சில நபர்களால் இரு நாடுகளின் உறவு ஒரு மோசமான சூழ்நிலைக்கு  தள்ளப்பட்டிருக்கிறது. சீனா எப்போதும் சர்வதேச சட்டங்களுடன் இணங்கிசெல்கிறது.  அதாவது சீனா எப்போதும் சர்வதேச சட்டங்களை பின்பற்றி செயல்படுகிறது. இனியும் அப்படியே செயல்படும். எனவே அமெரிக்கா இதைப்பற்றி சற்று சிந்திக்க வேண்டும், பெரும்பாலும் அமெரிக்கா ஒப்பந்தங்களை உடைத்து, சர்வதேச அமைப்புகளை சேதப்படுத்துகிறது. இதைப் பற்றி நாங்கள் அதிகம் சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் அமெரிக்காவைப் பற்றி உலகம் நன்கு அறிந்திருக்கிறது. மொத்தத்தில் பிரச்சனைகள் முறையாக பேசி தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அது மட்டுமின்றி அமெரிக்கா எங்கள் தலைமையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தத் தலைமை சீன மக்களின் யேகோபித்த ஆதரவால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. 
 

click me!