இந்த ரபேல் விமானங்கள் சுமார் 2,450 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது என்றும், அது பல நூறு கிலோமீட்டர்கள் தொலையில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவை
இந்திய எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஃபேல் போர் விமானம் இந்த மாதம் 29ஆம் தேதி இந்தியா விமானப்படையில் இணைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான வருகையால், தெற்காசியாவில் அதிவல்லமை பொருந்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்திய எல்லையில் சீனா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் அடிக்கடி தொல்லை கொடுத்து வருகின்றன. நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய பாதுகாப்புத்துறை ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுமார் 58,000 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்க இந்தியா பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒவ்வொரு ஆண்டும் 12 விமானங்கள் வீதம் வழங்கப்படும் என அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 விமானங்களை இந்திய விமானப்படைவசம் டசால்ட் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளது. ஆனால் அவைகள் இன்னும் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் ராஃபேல் விமானங்களை இயக்குவது தொடர்பாக இந்திய விமானப்படை வீரர்கள் பிரான்சில் பயிற்சி மேற்கொண்டு அதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த ரபேல் விமானங்கள் சுமார் 2,450 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது என்றும், அது பல நூறு கிலோமீட்டர்கள் தொலையில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான ஏவுகணைகளை பொறுத்துக்கொண்டு எதிரிகளின் முகாம்களை அல்லது தாக்க வேண்டிய இலக்குகளை ராஃபேலால் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 120 கிலோ மீட்டர் முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை கூட வானத்தில் இருந்தபடி ரஃபேல் போர் விமானத்தின் மூலம் தாக்கி அழிக்க முடியும் என்பது உச்சபட்ட சிறப்பாகும். ரஃபேல் போர் விமானத்தின் முதல் தொகுதி இந்த மாதம் இறுதிக்குள் இந்தியாவுக்கு வரக்கூடும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜூலை 29 ஆம் தேதி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை நிலையத்தில் விமானப்படைப் பிரிவில் இந்த விமானங்கள் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவிவரும் லடாக் பகுதியில், ரஃபேலை நிறுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. டெல்லியில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள விமானப்படை மாநாட்டில் ரஃபேல் போர் விமானங்கள் பார்வைக்கு வைக்கப்படுவது குறித்து இந்திய விமானப்படை தளபதி பதாரியா முடிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஃபேலின் இரண்டாவது படைப்பிரிவு மேற்கு வங்காளத்தின் ஹசிமாராவில் நிறுவிப்பட உள்ளது. ரஃபேலுக்கு தேவையான உள்கட்டமைப்பைத் தயாரிக்க ஹசிமாரா மற்றும் அம்பாலாவில் 400 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பிடதக்கது.