வாகன எண்ணிற்கான ஏலம் விடும் நிகழ்ச்சியில் 70 கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட் ஒன்று ஏலம் போன நிகழ்வு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
70 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்
துபாயில் 'மோஸ்ட் நோபல் நம்பர்ஸ்' அறக்கட்டளை சார்பாக சிறந்த வாகன நம்பர் பிளேட் மற்றும் மொபைல் எண்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது AA8 என்ற ஒற்றை எண் வாகன நம்பர் பிளேட் ஏலம் விடப்பட்டது. துபாயில் ஒற்றை எண் நம்பர் பிளேட் மிகவும் பிரசித்து பெற்றது. அந்த வகையில், துபாய் மதிப்பில் 53 மில்லியன் திரஹம்க்கும், இந்திய மதிப்பில் 70 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதற்கு முன் AA9 என்கிற நம்பர் பிளேட் 79 கோடிக்கு ஏலம் போனது அதிக விலையாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் , இந்த ஏலத்தில் AA8 நம்பர் பிளேட் உலகத்திலேயே 3 வது விலை உயர்ந்த எண்ணாக 70 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
50 நாடுகளுக்கு உதவி
பல்வேறு நாடுகளில் உணவுகள் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில், 50 நாடுகளை சேர்ந்த மக்களுக்காக உதவி செய்யும் வகையில் இந்த ஏல நிகழ்ச்சிக்கு துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. 1 பில்லியன் உணவு ஏற்பாடு செய்யும் வகையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் இரட்டை இலக்கை நம்பர் பிளேட் 8 கோடியே 23 லட்சத்திற்கும், மற்றொரு கார் நம்பர் பிளேட் 7 கோடியே 91 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இந்தியாவிலும் நடைபெற்ற ஏலம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏலத்தில், சண்டிகரில் உள்ள ஹோண்டா ஆக்டிவா உரிமையாளர் ஒருவர் தனக்கு சூப்பர் விஐபி '0001' நம்பர் பிளேட்டைப் பெறுவதற்காக ரூ. 15 லட்சம் செலுத்தி நம்பர் பிளேட்டை பெற்றுக்கொண்டார். இந்த ஏலத்தின் போது 378 சிறப்பு எண்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் மூலமாக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் ஏலம் தொகை வசூலிக்கப்பட்டது. . 'CH01-CJ-0001' ரூ.500,000 ஆரம்ப விலையில் ஏலம் தொடங்கப்பட்டு ரூ.15.44 லட்சத்திற்கு விற்கப்பட்டது.