#UnmaskingChina:சீன ராணுவத்தின் தூக்கத்தை கலைத்த தஞ்சாவூர் விமானப்படைத்தளம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2020, 6:42 PM IST
Highlights

நம் தஞ்சை விமான தளத்தை தாக்க வேண்டுமென்றால் குறைந்தது 60க்கும் மேற்பட்ட  ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும், அப்படி பயன்படுத்தினாலும் அதை தாக்க முடியாது எனவும்

இந்திய-சீன எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படக்கூடும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை போர் ஏற்பட்டால், அதில் யார் வெற்றி பெறுவர் என்பதற்கான சுய பரிசோதனைகளில் இருநாடுகளுமே ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ராணுவ ரீதியில் இந்தியாவை விட சீனா பலம் பொருந்தியதாக இருந்தாலும், புவியியல் ரீதியான அத்தனை சூழல்களும் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் மிக முக்கியமானது சுகோய்-30, பிரம்மோஸ் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள தஞ்சை விமானப்படைத்தளம். இது இந்தியாவிற்கு மிகப்பெரியபலம் என இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.  தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இந்திய விமானப்படைத்தளம் உள்ளது. இது 1940 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் போர் விமானங்கள் இங்கிருந்துதான் பறந்தன. இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் பாதுகாப்பிற்காகவும், அண்டை நாடுகள் மூலம் நம் நாட்டிற்கு பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சமாளிக்கவும் தஞ்சை விமானப்படைத்தளம் அதிநவீனபடுத்தப்பட்டுள்ளது. 

மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத சிறப்பு தஞ்சை விமான தளத்திற்கு உள்ளது, அதாவது இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என எந்தப் பகுதியில் இருந்தும் எதிரிநாட்டு போர் விமானங்கள் அல்லது நீர்மூழ்கி கப்பல்கள் நுழைந்தாலும் குறைந்தது 8 முதல் 10 நிமிடங்களுக்குள் அவைகளை தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் தஞ்சை விமானப்படை தளத்திற்கு உள்ளது.  புவியியல் ரீதியாக  முக்கடலையும் கண்காணிக்கும் மையப்புள்ளியாக தஞ்சை விமானப்படை ஏவுதளம் இருப்பதே அதற்கு காரணம். சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானத்துடன் பிரம்மோஸ் ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளன.  இந்த ரக போர் விமானத்தில் இருந்து, தரை இலக்கை நோக்கி பிரமோஸ் ஏவுகணைச் சோதனை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அந்த சோதனை வெற்றியடைந்ததை அடுத்து, தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக விமானங்களை கொண்ட ஒரு விமான படை பிரிவு நிரந்தரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்திய விமானப்படையில் "டைகர் சார்கிஸ்" என பெயரிடப்பட்ட N-222 என்ற விமான அணி உருவாக்கப்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானங்களுடன் கூடிய புதிய விமான படை பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் கடல் பகுதியை பாதுகாக்கவும், அந்நாடுகளின் போர்க்கப்பல்களை ஒரு சில நொடிகளில் தாக்கக் கூடிய ஆற்றல் தஞ்சை விமானப்படை தளத்திற்கு உள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், தஞ்சாவூர்  விமானப்படைத்தளம் அதிக கவனம் பெற்று வருகிறது. அங்குள்ள விமானப்படைத்தளம், பிரம்மோஸ் ஏவுகணை தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.  அதாவது ஒரு போர் ஏற்படும் சூழலில் அங்கிருந்து அணுகுண்டுகளுடன் விமானங்கள் சீறிப்பாயும் எனவும்  ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் அரபிக்கடல் வழியாக வரும்பட்சத்தில் அதையும் நாம் எளிதாக தாக்கி அழிக்க முடியும், அதேபோல் இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்க கடல் வழியாக சீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் வரும் பட்சத்தில்  தஞ்சாவூர் விமானப்படை தளத்திலிருந்து ஒரு சில நொடிகளில் அவர்களை நிர்மூலமாக்க முடியும் என தகவல் தெரிவிக்கின்றன. இலங்கையில் விமானப்படைத்தளம் சீனா அமைத்துள்ளதாகவும், இலங்கையையொட்டி சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படும் நிலையில், அவைகளுக்கு தஞ்சாவூர்  விமானப்படை தளத்தின் மூலம் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கப்பற்படைக்கு தஞ்சை விமானப்படை தளம் மிகப்பெரியபலமாக அமையும் என கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் எதிரி நாட்டு படையால் குறி வைக்க முடியாத அளவிற்கு,  அதாவது தாக்கி அழிக்க முடியாத அளவிற்கு தஞ்சாவூர் ஏவுதளத்தின் புவியமைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  தொலைதூர அணு ஆயுதத்தால் மட்டுமே அதை தாக்க முடியும் என்றும் அப்படி இதுவரை எந்த நாடும் பயன்படுத்தியது இல்லை என்றும், அப்படி அது பயன்படுத்தப்பட்டால் அது அணுஆயுதபோராக மாறும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியே பயன்படுத்தினாலும் தஞ்சை விமானப்படை தளத்தை துல்லியமாக தாக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.  சீனா, நம் தஞ்சை விமான தளத்தை தாக்க வேண்டுமென்றால் குறைந்தது 60க்கும் மேற்பட்ட  ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும், அப்படி பயன்படுத்தினாலும் அதை தாக்க முடியாது எனவும், அவரிகளிடமுள்ள மொத்தம்  200 ஏவுகணைகளில் தஞ்சாவூர் விமான தளத்திற்கு மட்டும் 60 ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும், அப்படி செய்வது சாத்தியமற்றது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல  தஞ்சாவூர் விமான தளத்தை வைத்து அனைத்து நாட்டு எதிரிகளுக்கும் தண்ணீர் காட்ட முடியும் என இந்திய பாதுகாப்புத்துறை பெருமிதம் கொள்கிறது. 
 

click me!