#UnmaskingChina: பருப்பு வேகாதுன்ணு தெரிஞ்ச உடனே பொட்டி பாம்பா அடங்கிய சீனா..!! இணைந்து செயல்பட அழைப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2020, 2:10 PM IST
Highlights

இந்திய-சீன எல்லையில் ஒட்டுமொத்த நிலைமையும் நிலையானது மற்றும் கட்டுப்படுத்தக் கூடியது. இருநாடுகளும் எல்லை நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, எல்லைப்பகுதியில் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்போம்.

இந்திய- சீன எல்லையில் கடந்த ஒரு மாதமாக பதற்றம் நீடித்துவரும் நிலையில், இருநாட்டு எல்லையில் பிரச்சனைகளை தீர்க்கவும், அதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை சமாளிக்கவும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், எல்லையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா தகுந்தபடி பதிலளித்து வரும் நிலையில், சீனா ஒன்றிணைந்து செயல்பட தயாரென அறிவித்துள்ளது. எல்லையில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு, அமெரிக்காவுடனான நெருங்கிய உறவு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா மீது ஆற்றாமையில் இருந்து வந்த சீனா, கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்தியா சீன எல்லைக்குள் அத்துமீறியதாக கூறி  எல்லையில் தன் ராணுவத்தை குவித்தது.  அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில்  கடந்த ஜூன்-15 ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம்  தெரிவித்தது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லையில் கூடதலாக படைகளை குவித்து வருவதால், இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சுழல் இருந்துவருகிறது. இந்நிலையில் வரும் 30 ஆம் தேதிக்குள் எல்லை நிலைமையை கட்டுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதுடன், அதற்காக படைகளை தயார் செய்து வருகிறது. இந்நிலையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து இருநாடுகளும் படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கிடையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா படைகளை தொடர்ந்து குவித்துவருவது செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன தூதரக  அதிகாரி சன் வெயிட்டாங்,  இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே வேறுபாடுகளை தீர்க்கும் திறன் கொண்டவை, கிழக்கு லடாக் நிலைமைகளை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கையிலிருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும். தற்போது இந்திய-சீன எல்லையில் ஒட்டுமொத்த நிலைமையும் நிலையானது மற்றும் கட்டுப்படுத்தக் கூடியது. இருநாடுகளும் எல்லை நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, எல்லைப்பகுதியில் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்போம். இதற்கு சீன தரப்புடன் இந்திய தரப்பு உடன்படும் என்று நாங்கள் நம்புகிறோம், அதேபோல எல்லை பிராந்தியத்தில் பதற்றத்தை குறைப்பதற்கான பெரும்பாலான பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய வளரும் நாடுகள், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட வளர்ந்துவரும் பொருளாதாரங்கள், அவற்றின் வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறுதலை உணர இருதரப்புக்கும் ஒரு வரலாற்று நோக்கம் உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் இந்தியாவும், சீனாவும் நியாயமான முறையில் வேறுபாடுகளை தீர்க்க திறமையும் விருப்பமும் கொண்ட நாடுகள். 

இருநாடுகளின் தலைவர்களிடையே உருவாக்கப்பட்ட முக்கியமான  ஒருமித்த கருத்தை இணைந்து பின்பற்றுவோம், எல்லைப்பகுதிகளில் அமைதியையும், ஸ்திரத்தன்மையும் கூட்டாக பேணுவோம், இருதரப்பு உறவுகளில் உறுதியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வோம் என்று கூறிய அவர்,  இதற்காக சீனா இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்றார்.
 

click me!