#UnmaskingChina: சீனாவை துவம்சம் செய்ய இந்திய ராணுவத்துடன் கைகோர்க்கும் அமெரிக்க ராணுவம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2020, 12:51 PM IST
Highlights

சீன இராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவின் ராணுவத்திறன் எந்தளவிற்கு உள்ளது என்பதை மறுஆய்வு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் வரும் சவால்களை எதிர்கொள்வது குறித்து அமெரிக்கா முழுமையாக ஆலோசித்து வருகிறது

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சீன ராணுவம் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ராணுவத்தை சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய  எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது,  சீனா, இந்திய எல்லையில் தனது ராணுவத்தை குவித்து இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவருவதுடன் எல்லையில்  அடிக்கடி அத்துமீறி வருகிறது.  கடந்த ஜூன்-15 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது அத்துமீறி சீன ராணுவம் நடத்திய  வன்முறை தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீன ராணுவத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,  உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்திய-சீன எல்லையில் நடந்துவரும் பதற்றத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் கூறியுள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான, பிலிப்பைன்ஸ், மலேசியா இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சீன ராணுவத்தை எதிர்த்து உலகளவில் படைகளை நிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. சீன இராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவின் ராணுவத் திறன் எந்தளவிற்கு உள்ளத் என்பதை மறுஆய்வு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் வரும் சவால்களை எதிர்கொள்வது குறித்து அமெரிக்கா முழுமையாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பாவிலுள்ள படைகளை அங்கிருந்து திரும்ப பெற்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிலைநிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக ஜெர்மனியிலுள்ள  52 ஆயிரம் வீரர்கள் கொண்ட படையை,  25 ஆயிரமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல இடங்களில் உள்ள அமெரிக்க படைகளை,  சீனாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் தென்சீன கடல்  உள்ளிட்ட பகுதிகளில்  நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. எனவே இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளிடம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என அமெரிக்கா நம்புகிறது.  சீன மக்கள் விடுதலை ராணுவம் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடன் எல்லை பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், தென் சீன கடற்பகுதியை இராணுவ மயமாக்கி வருகிறது.  மேலும் அங்கு சட்டவிரோதமாக அதிகமான நிலப்பரப்பை உரிமை கொண்டாடிவருகிறது, முக்கிய கடல் பாதைகளை அச்சுறுத்துகிறது, மேலும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவேகமாக இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்துவருகிறது. இது பல்வேறு நாடுகளின் பாதுகாப்புக்கு கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இவற்றையெல்லாம் எடுத்துரைத்து சீனா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உரையாடலை அமெரிக்கா நடத்தும் என பாம்பியோ கூறியுள்ளார்.
 

click me!