
ஆப்கானிஸ்தான் நாட்டில் குண்டூஸ் நகரில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக குண்டூஸ் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரமான இந்த நகரத்தை ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற தலீபான் தீவிரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைப்பற்றினர்.
இது தலீபான் தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற ஆப்கானிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் அமைந்தது.
அதைத் தொடர்ந்து நேட்டோ படைகளின் ஆதரவுடன் அங்கு கடும் போரில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் அரசு படைகள், சில நாட்களிலேயே அந்த நகரை மீட்டனர். அதன்பிறகுதான் ஆப்கானிஸ்தான் அரசு நிம்மதி அடைந்தது.
இந்நிலையில் குண்டூஸ் நகரை மீண்டும் கைப்பற்றுவதை மான பிரச்சனையாக கருதிய தலீபான் தீவிரவாதிகள் கடந்த 3ம் தேதி அந்த நகரை முற்றுகையிட்டனர். தீவிரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் நேட்டோ படையினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையின் தொடக்கத்தில் சில முக்கிய பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியதாக ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் அதன் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் கூறினார். பல சோதனைசாவடிகளையும் தாங்கள் கைப்பற்றி விட்டதாக கூறிய அவர், குண்டூஸ் நகரை முழுமையாக கைப்பற்றியதாக எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் மாலையில் நிலைமை மாறியது. ஆப்கானிஸ்தான் படைகளும், நேட்டோ படைகளும் சேர்ந்து தலீபான்களை ஓட வைத்தனர். குண்டூஸ் நகரை கைப்பற்றும் அவர்களது கனவு கலைந்து போனது.
இதுபற்றி குண்டூஸ் மாகாண கவர்னர் அசத்துல்லா அமார்கில் கூறுகையில், குண்டூஸ் நகரை முற்றுகையிட்டிருந்த தலீபான்களின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. சண்டை முடிவுக்கு வந்துள்ளது. தலீபான்கள் பெருந்திரளாக உயிரிழந்தனர்.
மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கி விட்டனர். வேலைகளுக்கு செல்கின்றனர். வீடுகளுக்குள் தலீபான்கள் பதுங்கி இருந்தால், அவர்களை நாளை (இன்று) பொழுது விடிவதற்குள் விரட்டியடித்து விடுவோம் என்றார்.
தலீபான்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது, ஆப்கானிஸ்தான் படைவீரர் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தலீபான்கள் உயிரிழப்பை பொறுத்தமட்டில் ஒன்றுக்கொன்று முரணாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏராளமான தலீபான்கள் பலியாகி உள்ளதாக கவர்னர் கூறியுள்ள வேளையில், குண்டூஸ் நகர போலீஸ் தலைமை அதிகாரிகள், ‘‘நூற்றுக்கணக்கான தலீபான்கள் பலியாகி விட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.