ஒவ்வொரு மாதமும் வரும் நிலா அல்லது சந்திரன் அல்லது பவுர்ணமி மத ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. வழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
பக் மூன் என்றும் சூப்பர் மூன் என்றும் இன்று தோன்றும் நிலவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இன்று தோன்றும் நிலவின் தோற்றம் வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாக இருக்கும். இது மட்டுமில்லை பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இந்த வகையான நிலா மாலை 5.08 மணி முதலே டெல்லியில் தெரியத் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நிலா எனப்படும் சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3,62,000 கிமீ தொலைவில் இருக்கும். ஜூலை 3 அன்று, சூப்பர் மூன் தென்கிழக்கு திசையில் இருந்து இரவு 7:13 மணிக்கு உதயமாகும்.
சூப்பர் மூனுக்கு என்ன காரணம்?
சூரியனும் சந்திரனும் பூமியின் எதிர் எதிர் பக்கங்களில் இணைந்திருக்கும் போது முழு நிலவு ஏற்படுகிறது. இதன் காரணமாக, சந்திரனின் முகம் 100 சதவிகிதம் சூரியனால் ஒளிரும். சந்திரன் பூமியை வட்டமாகச் சுற்றி வராமல் நீள்வட்ட வடிவில் சுற்றி வருவதால், காலப்போக்கில் தூரத்தில் மாற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் பூமிக்கு அருகில் நிலா அல்லது சந்திரன் தோன்றும். 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும். இதற்கு எதிராக பூமியில் இருந்து தொலைவில் தோன்றும் நிகழ்வை மைரோமூன் என்று அழைக்கிறோம்.
Buck Moon 2023 : சூப்பர் மூன்.. ஜூலை மாதத்தில் தோன்றும் இந்த ஆண்டின் பெரிய நிலா - எப்போது தெரியுமா?
சூப்பர் மூன் ஏன் பக் மூன் என்றழைக்கபடுகிறது?
முழு நிலவுகளுக்கு பெயரிடும் வழக்கம் பூர்வீக அமெரிக்க பழங்குடியின மக்களிடம் இருந்து துவங்கியது. அங்கு பழங்குடியினர் நிலவின் சுழற்சிகளைக் கவனித்து, இயற்கை நிகழ்வுகள் மற்றும் பருவகாலங்களை கணித்து வந்தனர். முக்கியமாக விவசாயம் மற்றும் வேட்டையாடலுக்கு பயன்படுத்தி வந்தனர்.
வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் பழங்குடியினர் பொதுவாக பக் என்று அழைக்கப்படும் ஆண் மானின் நினைவாக இந்த நிலவுக்கு பெயரிட்டனர். இந்த நேரத்தில் தான் இந்த மான்கள் புதிய கொம்புகளை வளர்க்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஜூலை முழு நிலவு காலத்தில்தான் ஆண் மானுக்கு கொம்புகள் வளரத் துவங்குமாம். இதை அடையாளப்படுத்தியே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நிலவை எப்படி பார்ப்பது?
நிலவை டெலஸ்கோப் மூலம் பார்ப்பது கண்களில் நீர் வரவைக்கலாம். அப்படி இருந்தால், பில்டர் போட்டு நிலவைக் காணலாம். ஜூலை ஏழாம் தேதி வரை இந்த நிலவு பூமிக்கு அருகில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.