இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் புதிய அதிபர் தேர்வு… அறிவித்தார் சபாநாயகர்!!

By Narendran S  |  First Published Jul 11, 2022, 9:05 PM IST

கோட்டாபய ராஜபக்சேவுக்கு அடுத்தபடியாக புதிய அதிபரை இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 20 ஆம் தேதி தேர்ந்தெடுக்கும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். 


கோட்டாபய ராஜபக்சேவுக்கு அடுத்தபடியாக புதிய அதிபரை இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 20 ஆம் தேதி தேர்ந்தெடுக்கும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இலங்கை அதிபர்  கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் முறையாக ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும், ஜூலை 13 ஆம் தேதி அவர் பதவி விலகுவதாக சபாநாயகரிடம் கடந்த 9 ஆம் தேதி தெரிவித்திருந்தார். மேலும் புதிய ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராஜபக்சே ராஜினாமா செய்த பின்னர், காலியிடத்தை அறிவிக்க ஜூலை 15 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும் என்றும், பதவிக்கான வேட்புமனுக்களை ஏற்க ஜூலை 19 ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும் சபாநாயகர் அபேவர்தன தெரிவித்துள்ளார். புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இலங்கையில் தொடரும் மக்கள் போராட்டம்... நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டபய ராஜபக்சே!!

Tap to resize

Latest Videos

இலங்கை அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகினால், அதிகபட்சமாக 30 நாட்களுக்கு சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவி வகிப்பார். ஜனாதிபதி கோட்டாபயவின் தற்போதைய பதவிக்காலத்தில் எஞ்சிய இரண்டு வருடங்களுக்குப் பதவி வகிப்பதற்கான புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரிடமிருந்து 30 நாட்களுக்குள் தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. முன்னதாக அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்சேவை விரட்டினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று இலங்கை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுக்க போராட்டம் நடந்தது.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கோத்தபய ராஜபக்சே

சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. போராட்டக்காரர்களை போலீஸ்காரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றும் 2 ஆவது நாளாக கொழும்பில் போராட்டம் தொடர்ந்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பல்வேறு தெருக்களிலும் அணிவகுத்து வந்து கோட்டபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து கோட்டபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல்களை முற்றிலும் இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா மறுத்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த அவர், அதிபர் கோட்டபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை.கோட்டபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்று தெரிவித்தார். 

click me!